தஞ்சாவூர்:
புகழ்பெற்ற நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு புவிசார் குறியீடுக்கான அங்கீகார சான்று கிடைத்துள்ளது.

இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞரும், புவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யும் அறிவுசார் சொத்துரிமை கழக வழக்கறிஞருமான ப.சஞ்சய்காந்தி தெரிவிக்கையில், தமிழகத்தில் இதுவரை 46 பொருட்கள் புவிசார் குறியீடு பெறப்பட்டதில் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து 10 பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 1955-ம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினைக் கலைஞர் என்பவரால், நாதஸ்வரத்தில் “சுத்த மத்தியமம் ஸ்வர”த்தை கண்டுபிடித்து அதை நாதஸ்வர கருவியில் உருவாக்கினர். இதனால் தான் நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் என பெயர் வந்தது. தற்போது இந்த நாதஸ்வரம் கருவி 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.

பல்வேறு சிறப்புகள் கொண்ட நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு ஜன.31 புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக்கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்துக்காக விண்ணப்பிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு ஆவணங்களை சான்றாக வழங்கி, தொடர்ந்து 8 ஆண்டுகள் போராட்டத்துக்கு பின்னர் தற்போது புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது என்று கூறினார்.