சென்னை: பழனி பஞ்சாமிர்தத்துக்கு ருசியை கொடுக்கும் கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரை கார அரிசி, சேலம் கண்ணாடி கத்திரிக்காய்க்க  புவிசார் குறியீடு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழ்நாட்டின்  பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுபோல, ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சக்திமிகுந்த  சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது. சேலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டும், கண்ணாடி போல பிரதிபலிக்கும் கத்திரிக்காயும் மக்களிடையே பிரபலமானது.

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும், பகுதிக்கும் தனித்தனி பாரம்பரிய அடையாளங்கள் இருக்கின்றன. தமிழ்நாடு என்றாலே ஜல்லிக்கட்டு, தமிழகத்தின் தஞ்சாவூர் ஓவியம், பனை வெல்லம் உள்பட பல்வேறு பொருட்கள் உள்ளன.  அதுபோல டார்ஜிலிங் தேநீர், மைசூர் பட்டு என பல பொருட்கள் உள்ளன. இதுபோன்ற பாரம்பரியம் மிக்க பொருட்களை பாதுகாக்கும் பொருட்டு, இந்தியாவில் பொருட்களுக்கான புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் 1999-ம் ஆண்டு இயற்றப்பட்டது.  தொடர்ந்து,  உலக வர்த்தக மையத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த  ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவில் பொருட்களுக்கு இங்கு விண்ணப்பித்து புவிசார் குறியீடு பெற்றுக்கொள்ளலாம். மத்திய அரசின் கீழ் செயல்படும் இதற்கான அலுவலகத்தின் தலைமையகம் சென்னை கிண்டியில் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் நமது பாரம்பரிய பொருட்கள் குறித்து, பதிவு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பொருளுக்கான உரிமை மற்றும் தொழில் பாதுகாப்பை பெற முடியும்.

இதன்படி ஏற்கனவே, தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, திண்டுக்கல் பூட்டு, மணப்பாறை முறுக்கு, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, நாச்சியார்கோவில் குத்து விளக்குகள், கும்பகோணம் வெற்றிலை, மதுரை மல்லி, கொடைக்கானல் வெள்ளைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம் என ஏராளமான பொருட்களுக்கு ‘புவிசார் குறியீடு’  பெறப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் சார்பாக கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரை, ராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி மற்றும் சேலம் கண்ணாடி கத்திரி ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு கேட்டு சென்னையில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவு அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இந்தப் பொருட்கள் உற்பத்தியாகும் உள்ளூர் சங்கங்கள் இணை விண்ணப்பதாரர்களாகவும், நபார்டு மதுரை அக்ரி பிசினஸ் இன்குபேஷன் பார்ம் ஒருங்கிணைப்பாளராகவும் கொண்டு இந்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

ஈரோடு கவுந்தபாடி பகுதியில், நூற்றுக்கணக்கான விவசாயிகள் நாட்டுச்சர்க்கரை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். பரம்பரை பரம்பரையாக நாட்டுச் சர்க்கரை தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டு வரும் இவர்கள், தங்களுக்கென சொந்தமாக உள்ள நிலத்தில் கரும்பு பயிரிட்டு, அந்த கரும்பை தங்களின் சொந்த ஆலையிலேயே ஆட்டி, அந்த கரும்பு பாலில், தூய கலப்படமில்லாத நாட்டுச் சர்க்கரையை தயாரிக்கின்றனர். பழனி பஞ்சாமிர்தம் ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்ற நிலையில் அந்த பஞ்சாமிர்தத்தை ருசிக்க செய்வது கவுந்தப்பாடி நாட்டு சர்க்கரையே.

அதுபோல, ராமநாதபுரம் மாவட்டத்தின் திருப்புல்லாணிப் பகுதிகளில் சித்திரைகார் நெல்வகை சாகுபடி செய்யப்படுகிறது. இதுவே ஆரம்பகால சிவப்பு அரிசி வகை என்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளது. 1964-ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின்போது நெல் வகை முற்றிலும் அழிந்த நிலையில் அதன்பின், அருகில் உள்ள சிக்கல் கிராமத்தில் இருந்து கொண்டு வரப்பட்டு, தற்போது சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகை அரிசி கஞ்சி பல மணி நேரம் பசியைத் போக்குகிறது.

சேலம் கண்ணாடி கத்திரிக்கு விண்ணப்பித்த சேலம் விவசாயிகள் சங்கத்தினர் கூறும்போது, சேலம், ஈரோடு பகுதிகளில், வாழப்பாடி, ஆத்தூர், சங்ககிரி, எடப்பாடி, மேச்சேரி, ஓமலூர் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்படுகிறது. அது பளபளப்பாகவும் ஊதா நிறமாகவும் இருந்தது. இந்த குறிப்பிட்ட கத்திரிக்காய் மெல்லிய தோல் மற்றும் அதிக அளவு சதை கொண்டது. அதிக விதைகள் இருந்தாலும், அவை மென்மையாகவும், உணவில் சுவையை கூட்டுவதாகவும் உள்ளது.

GI Tag,  புவிசார் குறியீடு,