சென்னை; அதிமுக தற்காலிக பொதுச்செயலாளராக எடப்பாடிக்கு பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவர் எந்த விதியின்கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற விவரம் வெளியாகி உள்ளது.
ஜெ.மறைவுக்கு பிறகு, அதிமுகவை இரட்டை தலைமை நிர்வகித்து வந்தது. ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வந்தனர். ஆனால், இரு தலைவர்களுக்கு இடையே ஒற்றுமை இல்லாததால், கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியுடன் இருந்து வந்தார்கள். இதனால் சமீப காலமாக கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்ற கோஷம் எழுந்தது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவை கூட்டி, அதற்கான தீர்மானத்தை கொண்டுவர எடப்பாடி பழனிச்சாமி முயற்சி மேற்கொண்டார். ஆனால், இதை ஏற்க மறுத்த ஒபிஎஸ், நீதிமன்றங்கள் மூலம் பல்வேறு தடங்கல்களை ஏற்படுத்தி வந்தார். ஆனால், அவரது முயற்சிகள் அனைத்தும் பொய்த்துப் போனது. நீதிமன்றங்கள் ஓபிஎஸ்-ன் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
இந்த பரபரப்பான சூழலில் இன்று அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூடியது. இதில், கட்சியின் பைலாவில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரட்டை தலைமை பதவிகள் ரத்து உள்பட பல்வேறு எடப்பாடி பழனிச்சாமியை கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமனம் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளக பதவி ஏற்றுள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் இன்று 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தீர்மானம் 5ல் கழக அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக பொருளாளருக்கான அதிகாரம் குறைப்பு அதிமுகவில் பொருளாளருக்கான அதிகாரங்கள் குறைத்து பொதுச் செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டது.
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி கையெழுத்திடும் அதிகாரம் பொதுச் செயலருக்கே உண்டு. வங்கி நடவடிக்கைகள், கடன் விவகாரம் ஆகியவற்றில் ஈடுபட பொதுசெயலருக்கு அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீர்மானம்-5:
கழக சட்டதிட்ட விதிகளின்படி, கழக இடைக்காலப்பொதுச்செயலாளரை தேர்வு செய்து தீர்மானம்
கழகப்பொதுச்செயலாளர் என்ற ஒற்றைத்தலைமையின் கீழ் செயல்பட வேண்டும் என்ற, கழகப்பொதுக்குழு உறுப்பினர்களுடையே பெரும்பான்மை முடிவின்படி, விதிஎண் 20அ-வின்படி, கழகப்பொதுச்செயலாளர் பொறுப்பு மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளதால், புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கும் வரை, கழக இடைக்காலப் பொதுச்செயலாளர் ஒருவரை திருத்தப்பட்ட விதி எண் 20அ பிரிவு-7ன்படி, பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட வேண்டி உள்ளது.
அதன்படி, பெரும்பான்மையான கழகக்பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமைச் நிலையச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க் கட்சித்தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை கழகத்தின் இடைக்கால பொதுச்செயலாள ராக நியமனம் செய்ய வேண்டி, இப்பொதுக்குழுவால் தேர்வு செய்யப்படுகிறார். அதன்படி, பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
கழகப்பொதுக்குழு உறுப்பினர்களால், கழக தலைமைச் நிலையச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களை கழக சட்டதிட்ட விதி -20அ பிரிவு 7-ன்படி இப்பொதுக்குழு இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்வுசெய்து, நியமனம் செய்யப்படுகிறார் என்பதை ஏகமனதாக முடிவு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.