சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உள்படட்ட பகுதிகளில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சுமார்  5394  சாலைகளை சரிசெய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதிகளில் சாலை வசதி உள்பட அடிப்படை வசதிகள் மோசமாக உள்ளதாகவும், அரசும், மாநகராட்சியும் கண்டுகொள்வது இல்லை என குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட கூடுதல் பகுதிகளில் 5394 சாலைகளை சரி செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன. தற்போதைய நிலையில், சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளுக்குள் 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள், 14 பேரூராட்சிகள், 22 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. சுமார்  5,904 சதுர கிமீ பரப்பளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது.  ஆனால்,  இணைக்கப்பட்ட பெரும்பாலான புறநகர் பகுதிகளில் ஆட்சியாளர்கள் மற்றும் அதிகாரிகளால் இன்றுவரை புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. இது அப்பகுதி மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு, தங்களது பகுதிகளில் அடிப்படை வசதிகள், சாலை வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையுடன் இணைக்கப்பட்ட புறநகர் பகுதியில்  5394 சாலை பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக  வளசரவாக்கம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அதிகபட்சமாக 1640 சாலைகளும், நந்தம்பாக்கம், ராமாபுரம், போரூர் மற்றும் வர்த்தக மையத்தை உள்ளடக்கிய ஆலந்தூர் மண்டலத்தில் 773 சாலைகளும், சோழிங்கநல்லூர் மற்றும் பெருங்குடியில் ஆயிரம் சாலைகளும்  அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் திருவொற்றியூர் மற்றும் மணலியில் 500-க்கும் மேற்பட்ட சாலைகள் மறுசீரமைக்கப்படும் அதேசமயம், மாநகராட்சி 1,000-க்கும் மேற்பட்ட சாலைகளை ரிலே செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன், பழுதடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளித்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும், அதற்கான பணிகள் உடனடியாக தொடங்கப்படும் மற்றும் மழைக்காலத்திற்கு முன்னதாகவே பாதிக்கப்பட்டுள்ள சாலைகள்   சீரமைக்கப்படும் மற்ற சாலைகளுக்கு, தற்காலிக சாலை சீரமைப்பு மற்றும் ஒட்டுதல் பணி மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

ஆனால் சென்னை மாநகராட்சி கூறியபடி மழை காலத்திற்குள் அவ்வளவு  சாலைகளையும் செப்பனிட முடியுமா?  என்பது கேள்விக்குறிதான் என்றவர்கள், சாலைகளை தரமானதாக அமைத்தால் மட்டுமே மழைக்கு தாக்குப்பிடிக்கும் அதை அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்  என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.