சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகளில் விதிகளுக்கு புறம்பாக சாலையில் விடப்படும் வாகனங்களையும் உரிமைகோரப்படாத வாகனங்களையும் அகற்ற சென்னை மாநகராட்சிக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம் அனுமதி கோரியுள்ளது.
சாலையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள் குறித்து நாள்தோறும் சுமார் 30 க்கும் மேற்பட்ட புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு வருவதை அடுத்து மாநகராட்சி இந்த கோரிக்கையை வைத்துள்ளது.
இது போன்ற வாகனங்களை அகற்றும் அதிகாரம் காவல்துறைக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, இதனால் இந்த புகார்கள் மீது மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருப்பதை அடுத்து நகராட்சி நிர்வாக விதிகளில் திருத்தம் செய்யவேண்டும் என்று மாநில அரசிடம் முறையிட்டுள்ளது.
கேட்பாரற்று கிடைக்கும் வாகனங்கள் குறித்து நம்ம சென்னை செயலி மற்றும் மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு அதிகளவில் புகார் வருவதை அடுத்து மாநகர காவல்துறையுடன் இணைந்து சிறப்பு நடவடிக்கை மூலம் இவற்றை தற்போது அகற்றி வருகின்றனர்.
இதற்கான சட்ட திருத்தம் குறித்த தீர்மானம் அடுத்த மாமன்ற கூட்டத்தில் கொண்டுவரப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை வரவேற்கதக்கது என்ற போதும் அவர்களின் நடவடிக்கை சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றுவதோடு நின்றுவிடாமல் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், ஓ.எஸ்.ஆர். நிலத்தை ஆக்கிரமித்து செயல்படும் அமைப்புகளையும் அகற்ற தேவையான முயற்சிகளையும் அதற்கான முறையான ஊழியர்களையும் பணியமர்த்த வேண்டும் என்று கூறுகின்றனர்.