சென்னை:  சென்னை  கடற்கரை பகுதிகளில்  குப்பைகளை போடக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,  விதிகளை மீறி குப்பை கொட்டிய 241 பேரிடம் இருந்து,  ரூ.1,90,500 (ஏறக்குறைய ரூ.2லட்சம்) அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக சென்னை  மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

மெரினா மற்றும் சென்னையில் உள்ள கடற்கரையில் உரிய விதிகளைப் பின்பற்றாமல் குப்பை போடுபவர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றும் பொதுமக்கள் குப்பைகளை அங்கு வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டியில் போடுங்க.. இல்லையெனில் ரூ.5000 வரை  அபராதம் கட்ட நேரிடும் என சென்னை மாநகராட்சி ஏற்கனவே  எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கடற்கரை பகுதிகளில் விதிகளை மீறி குப்பை போட்டவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக,  அசென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில்,  சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் சுகாதாரத்தைப் பேணும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய கடற்கரைப் பகுதிகளில் கூடுதலாக தூய்மைப் பணியாளர்கள், இயந்திரங்களைக் கொண்டு 14ம் தேதி முதல் தீவிரத் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடற்கரை பகுதிகளில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை 233.88 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள், 2016ன்படி, பொது இடங்கள் மற்றும் கடற்கரைகளில் குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள் உள்ளிட்ட எந்தவிதமான கழிவுகளையும் கொட்டுவது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் குப்பை கொட்டுவதை தவிர்க்கும் வகையிலும், மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாநகராட்சியின் சார்பில் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், கடற்கரைகளில் ஆங்காங்கே குப்பை தொட்டிகளும் வைக்கப்பட்டு அவற்றில் குப்பை போட வேண்டும் எனவும் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.

இதனை மீறி மெரினா மற்றும் இதர முக்கிய கடற்கரைகளில் குப்பை குப்பைத் தொட்டிகளில் போடாமல் கண்ட இடங்களில் கொட்டிய தனிநபர்கள் மற்றும் கடைகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட விதிகளின்படி, ரூ.5,000 வரை 241 பேருக்கு ரூ.1,90,500 அபராதத் தொகை இதற்கென நியமிக்கப்பட்ட 26 கண்காணிப்புக் குழுக்களின் வாயிலாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது.

எனவே, கடற்கரை பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]