சென்னை நகரில் பொது இடங்களில் குப்பை கொட்டுவது, சாக்கடை நீரை நீர்நிலைகளில் விடுவது, குப்பையை தரம் பிரிக்காமல் தருவது ஆகிய செயல்களில் ஈடுபடுவர்களிடம் இருந்து நிகழ்விடத்திலேயே அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சி தீர்மானித்துள்ளது.
சாலை விதி மீறுவோரிடம் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலிப்பது போல் இனி சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் இதேபோன்ற வசூலில் ஈடுபட உள்ளனர்.
இன்னும் ஓரிரு நாளில் இதனை செயல்படுத்த உள்ள சென்னை மாநகராட்சி, அதற்காக 500 POS கருவிகளை வாங்கியுள்ளது.
துப்புரவு ஆய்வாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் இந்த சாதனங்களைப் பயன்படுத்துவார்கள் தவிர, 15 பறக்கும் படை வாகனங்களிலும் நிறுவப்பட உள்ள இந்த POS கருவிகள் மூலம், 15 மண்டலங்களிலும் விதி மீறுபவர்களைப் பிடித்து அபராதம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை, விதி மீறுவோருக்கு நோட்டீஸ் அல்லது சலான் வழங்கப்பட்டு அபராதத் தொகை டிமாண்ட் டிராஃப்ட் அல்லது காசோலையாக வசூலிக்கப்பட்டு வந்தது.
இனி, பிஓஎஸ் சாதனங்கள் நிகழ்விடத்திலேயே அபராதம் வசூலிக்கும் முறையால் சென்னை மாநகராட்சிக்கு நேர மிச்சமாவதுடன் யூபிஐ, கார்ட் பேமெண்ட்டுகள் மூலம் உடனடியாக மாநகராட்சி கருவூலத்துக்கு பணம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது.
இந்த புதிய நடவடிக்கைக்காக கழிவுகளைப் பிரிக்காத வீடுகள் குறித்து குறிப்பெடுக்க துப்புரவு தொழிலாளர்களை பெருநகர சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
குப்பையை தரம் பிரிக்காமல் தருபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும்.
குப்பையை பொது இடத்தில் கொட்டினால் ரூ. 1000 முதல் ரூ. 5000 அபராதம் வசூலிக்கப்படும்.
வீட்டில் இருந்து சாக்கடை நீரை நீர்நிலைகளில் விட்டால் ரூ. 25000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கால்நடைகள், செல்லப்பிராணிகளை ரோட்டில் திரியவிடுபவர்களுக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே சென்னை மாநகராட்சிக்கு செலுத்தப்படும் சொத்து வரி அரையாண்டு தொடங்கும் போதே செலுத்தப்படுவதால் அதில் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வட்டியில் மாநகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மாநகராட்சியின் இந்த புதிய அபராத முயற்சி நாட்டிலேயே பணக்கார மாநகராட்சியாக சென்னை மாநகராட்சியை மாற்ற உள்ளது.
சென்னை சாலைகளில் இனி குப்பை கூளம், பாதாள சாக்கடை அடைத்துக் கொண்டு சாக்கடை நீர் சாலையில் ஓடுவது, சாலையோரங்களில் மழை நீர் தேங்குவது, கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் சுற்றித்திரிவது முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறப்படுவதுடன் அபராதமாக வசூலிக்கப்படும் தொகையில், கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பராமரிக்க தனி இடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளையில், சாலையை ஆக்கிரமித்து கடைகள் அமைத்திருப்பவர்களுக்கு ‘ஸ்பாட் ஃபைன்’ விதித்து மீண்டும் கடை நடத்த அனுமதிக்கலாமா அல்லது அதற்கு என்ன வழி என்பது குறித்தும், அனுமதியின்றி விளம்பரப் பலகைகள், போஸ்டர்கள், சுவர் விளம்பரங்கள், கொடிக் கம்பங்கள் ஆகியவற்றை நடும் அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா ரசிகர்களிடம் இருந்து எப்படி அபராதம் வசூலிப்பது என்பது குறித்தும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுடன் அந்தந்த வார்டு அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் கலந்தாலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கையை அடுத்து கடந்த சில ஆண்டுகளாக களையிழந்து காணப்படும் சென்னை மாநகரம் மீண்டும் புதிய பொலிவு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.