டில்லி

முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக வேட்பாளருமான கவுதம் கம்பீர் தனது 15 மணி நேர அரசியல் வாழ்வில் தம் மீது எழுந்த புகார்கள் 15 வருட கிரிக்கெட் வாழ்வுக்கான புகார்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவித்துள்ளார்.

கிழக்கு டில்லி மக்களவை தொகுதி தேர்தலில் பாஜகவின் சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரான கவுதம் கம்பீர் நிறுத்தப்பட்டுள்ளார். இவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஆம் ஆத்மி சார்பில் அதிஷி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் அரவிந்தர் சிங் லவ்லி மட்டுமே அரசியல் அனுபவம் உள்ளவர் ஆவார். இவர் டில்லியின் முன்னாள் அமைச்சரும் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினர் பதவி வகித்தவரும் ஆவார்.

அதிஷிக்கும் கவுதம் கம்பீரைப் போல இது முதல் தேர்தல் எனினும் ஆக்ஸ்போர்ட் பட்டதாரியான அதிஷி கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பெரும் பங்கு ஆற்றியவர். துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவுக்கு உதவியாளராக பணி ஆற்றியவர். அதிஷி தனது தொகுதி குறித்தும் அங்கு தேவையான நலத் திட்டங்கள் குறித்தும் பொது மேடையில் விவாதிக்க கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுத்தார்.

அதை தொடர்ந்து ஒரு தேர்தல் கூட்டத்தில் கவுதம் கம்பீர், “நான் விவாதத்துக்கு ஒப்புக் கொள்ளததால் பயந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியினர் கூறி உள்ளனர். நான் பாகிஸ்தானுக்கே பயப்படாதவன். ஆகவே நான் விவாத்துக்கு அஞ்சவில்லை.  ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நான் விவாதம் செய்கிறேன்.

ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் அரசியலில் நான்கரை ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்.  அவருடைய அளவுக்கு எனக்கு அனுபவம் கிடைத்த பிறகு நான் அவருடன் விவாதம் செய்கிறேன்.

நான் அரசியலுக்கு வந்த 15 மணி நேரத்துக்குள் என் மீது பல புகார்களை ஆம் ஆத்மி சுமத்தி உள்ளது. எனது 15 வருட கிரிக்கெட் வாழ்வில் கூட இவ்வளவு புகாரை நான் சந்தித்தில்லை.

அரவிந்த் கெஜ்ரிவாலை பொறுத்த வரை குற்றச்சாட்டுக்கு பதில் குற்றச்சாட்டு அல்லது விவாதத்துக்கு பதில் மற்றொரு விவாதம் என அரசியல் செய்து வருகிறார். மக்கள் நலத் திட்டம் எதுவும் செய்யவில்லை” என பேசி உள்ளார்.