டில்லி:

டந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக பலருக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,  மீதமுள்ளவர்களுக்கு இன்று 2வது கட்டமாக விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் பிரபல   கிரிக்கெட்வீரர் கவுதம் காம்பீர், நடிகர் மனோஜ் பாஜ்பாய் உள்பட 56 பேருக்கு இன்று விருதுகள்  வழங்கப்பட்டன.  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கினார்.

கலை, அறிவியில், விளையாட்டு, மருத்துவம், சமூகம் உள்ளிட்ட துறை களில் சாதனை படைப் போருக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றன. பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்ம விபூஷன் போன்ற விருதுகள் அவரவர்களின் தகுதிக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுவோர் பட்டியல் கடந்த மாதம் வெளியானது. அதில் 112 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இவர்களில் 56 பேருக்கு கடந்த 11ந்தேதி டில்லியில் நடைபெற்ற விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. அப்போது தமிழகத்தை சேர்ந்த பங்காரு அடிகளார், நடிகரும், இயக்குநருமான பிரபுதேவா டிரம்ஸ் சிவமணி, இசை அமைப்பாளரும் பாடகருமான சங்கர் மகாதேவன் உள்படபலர் விருதுகள் பெற்றனர்.

இந்த நிலையில் இன்று 2வது கட்டமாக மீதமிருந்து 56 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.   குடியரசு தலைவர் மாளிகையில் நடந்த விழாவில், இந்திய கிரிக்கெட் அணியின் முன் னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் காம்பீர், சமூகச் செயற்பாட்டாளர் பிரகாஷ் ராவ், பேஸ்கட்பால் வீராங்கனை பிரஷாந்தி சிங், வில்வித்தை வீராங்கனை லைஷ்ராம் பாம்பல்யா, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, தபேலா கலைஞர் ஸ்வாபன் சவுத்ரி, நடிகர் மனோஜ் பாஜ்பாய், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ், அறுவை சிகிச்சை மருத்துவர் ராமசாமி வெங்கடசாமி, சின்னப்பிள்ளை உள்பட  56 பேர் பத்ம விருதுகள் பெற்றனர்.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பலர் கலந்துகொண்டனர்.