ராய்ப்பூர்

சதீஸ்கர்  பசு பாதுகாப்பு கழகம் அம்மாநில  அரசு கோமியத்தை லிட்டருக்கு ரூ. 10 என்னும் விலைக்கு வாங்குவதன் மூலம் பசுக்கள் அனாதையாக விடுவதை தடுக்கலாம் என கூறி உள்ளது.

சதீஸ்கர் மாநிலத்தில் சமீபத்தில் பா ஜ க உறுப்பினர் நடத்திய ஒரு கோசாலையில் பல பசுக்கள் மரணமடைந்தன.   பசுக்களை போற்றி வணங்கும் பா ஜ க ஆட்சியில் இது போல் நடந்ததற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர்.   பசுவதை சட்டம் செயல்படும் மாநிலங்களில் குஜராத்தும் சதீஸ்கரும் அடக்கம்.

சதீஸ்கர் மாநில பசு பாதுகாப்பு கழகத்தின் தலைவர் விஸ்வேஸ்வர் படேல் பசுக்கள் பராமரிக்காமல் விடப்பட்டு மரணம் அடைவதைக் குறித்து பெரும் கவலை தெரிவித்தார்.

ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது :

”கோமியம் மருத்துவ குணமுடையது.   அதைக் கொண்டு உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் செய்ய முடியும்.   இந்த அரசு பசுக்களை பாதுகாப்பதை தன் கொள்கைகளில் ஒன்றாக சொல்லிக் கொள்கிறது.   எனவே கோமியத்தை அரசு லிட்டருக்கு ரூ. 10 என விலைக்கு வாங்கலாம்.   அதனால் பசுக்கள் அனாதையாக விடப்பட்டு பரிதாப மரணம் அடைவதையும் தடுக்க முடியும்.   விலை அதிகம் எனக் கருதினால், ஐந்து அல்லது 7 ரூபாய் கொடுத்தாலும் போதும்,  மக்கள் நிச்சயம் பசுக்களை ஆதரவற்று விட மாட்டார்கள்.

இந்த மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு கோசாலையிலும் பசுக்களின் பராமரிப்பை அரசு கண்காணிக்க வேண்டும்.  அதற்கு நாங்களும் உதவத் தயார்.   மாநிலத்தில் உள்ள 115 கோசாலைகளில் 92 லட்சம் பசுக்கள் உள்ளன.   அதே நேரத்தில் பசுக்களின் மரணங்களும் அதிகம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.   இதற்கு காரணமான பா ஜ க உறுப்பினர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.  பசுக்களின் மரணம் என்பது ஒரு கட்சிக்கு, ஒரு மாநிலத்துக்கு ஏன் இந்து சமுதாயத்துக்கே பேரிழப்பாகும்.   இந்த மரணத்துக்கு காரணமான பா ஜ க வை சேர்ந்த ஹரிஷ் வர்மா மேல் வழக்கு தொடர்ந்தது நாங்கள் மட்டுமே.    அவர் கைது செய்யப்பட்டதும் அவரைக் கட்சியில் இருந்து நீக்கியது மட்டும் தான் பா ஜ க செய்துள்ளது.   அவருக்கு மேலும் தண்டனை அளிக்கப்பட வேண்டும்” என கூறி உள்ளார்.