ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காலநிலை குறித்த உச்சி மாநாட்டில் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வாகனங்களை படிப்படியாக விளங்கிக்கொள்வது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. மற்றும் டீசல் வாகன உற்பத்தியை நிறுத்துவதாக 6 பெரும் கார் உற்பத்தி நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளன, மேலும் 31 நாடுகளில் இவ்வகை வாகன விற்பனையை படிப்படியாக குறைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன.
போர்ட், மெர்சிடிஸ் பென்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ், வோல்வோ உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் 2035 க்குள் உலகின் முன்னணி சந்தைகளில் இருந்தும் 2040 க்குள் உலகம் முழுக்க அனைத்து நாடுகளில் இருந்தும் இவ்வகை வாகன உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளன.
பிரிட்டன், கனடா, இந்தியா, நார்வே, நெதர்லாந்து, ஸ்வீடன், போலந்து உள்ளிட்ட 31 நாடுகளில் இருந்து விற்பனையை நிறுத்திக்கொள்ளும் இந்நிறுவனங்கள் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட உலகின் முன்னணி கார் விற்பனையாகும் நாடுகளில் தனது விற்பனை குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.
சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்துள்ள இந்நிறுவனங்களின் இந்த நடவடிக்கையால் உலகின் நான்காவது மிகப்பெரிய கார் சந்தையான இந்தியாவில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று தெரிகிறது.
காலநிலை மாற்றம் குறித்த இந்த மாநாடு எந்த நிறுவனங்களையும் கட்டுப்படுத்தவில்லை என்ற நிலையில் டொயோட்டா, வோக்ஸ்வகன், நிசான்-ரெனால்ட் போன்ற நிறுவனங்கள் இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.