டில்லி:

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டரில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஜம்மு காஷ்மீர் மாநிலம் காதுவாவில் பகர்வால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். மனித இனத்திற்கு எதிராக நடக்கும் குற்றமாகும். இதை தண்டிக்காமல் விடக்கூடாது. இச்செயல்களில் ஈடுபடும் அத்தகைய தீய குற்றவாளிகளுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கலாம்?.

அப்பாவி சிறுமி மீது கற்பனையில் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு நடந்துள்ள இந்த மிருகத்தனமான செயலில் எப்படி அரசியல் தலையீட்டை அனுமதிக்க முடியும்’’ என்று தெரிவித்துள்ளார். இதை கண்டிக்கும் வகையில் இன்று நள்ளிரவு டில்லி இந்தியா கேட் பகுதியில் மெழுகுவர்த்தி ஏந்தும் போராட்டத்தில் ராகுல்காந்தி ஈடுபடவுள்ளார்.

கடந்த ஜனவரியில் கடத்தப்பட்ட சிறுமி சிறைவைக்கப்பட்டு 2 போலீசார் உள்ளிட்ட கும்பல் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளது. இது தொடர்பாக 2 போலீஸ்காரர்கள், முன்னாள் வருவாய் துறை அதிகாரி உள்பட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.