சென்னை: விநாயகர் சதுர்த்தியன்று பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்க தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சிலை தயாரிப்பாளர்கள் சட்டப்பேரவை நடைபெற்று வரும் கலைவாணர் அரங்கம்  அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தமிழ்நாடு அரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு செய்துள்ளதுடன், பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் சில பொழுதுபோக்கு நிகழ்வு மற்றும் வழிபாட்டுத்தலங்களுக்கு தடையை தொடர்ந்துள்ளது.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போதுள்ள கொரோனா பரவல் சூழல் காரணமாக, சமய விழாக்களை முன்னிட்டு, மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்கள் நடத்த தடை உள்ளது. பொது இடங்களில் சிலைகளை நிறுவவும் அல்லது விழா கொண்டாடவும் அனுமதி மறுக்கப்படுகிறது. சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், நீர் நிலைகளில் சிலைகளை கரைக்கவும் அனுமதி இல்லை

விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக, தனி நபர்கள் தங்கள் வீடுகளில், விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனி நபர்களாக சென்று, அருகில் உள்ள நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதி உண்டு

சென்னையை பொறுத்தவரை, கடற்கரையில் குறிப்பாக, சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில், இச்செயல்பாட்டிற்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இந்த அனுமதி தனி நபர்களுக்கு மட்டும் பொருந்தும். அமைப்புகள் இச்செயல்பாடுகளில் ஈடுபடுவது, முழுதுமாக தடை செய்யப்படுகிறது

தனி நபர்கள், தங்கள் வீடுகளில் வைத்து வழிபட்ட சிலைகளை, கோவில்களின் வெளிப்புறத்திலோ; சுற்றுப்புறத்திலோ வைத்து செல்ல, அனுமதி அளிக்கப்படுகிறது. இச்சிலைகளை பின்னர் முறையாக அகற்ற, ஹிந்து சமய அறநிலைய துறையால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்

விழாவிற்கான பொருட்கள் வாங்க, கடைகள் மற்றும் சந்தைகளுக்கு செல்லும் பொது மக்கள், முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை, கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துஉள்ளது.

செப்டம்பர் 10ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில்,   விநாயகர் சிலைகள் செய்யும் பணிகளில் பலர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காரணமாக விநாயகர் சிலை பொதுஇடங்களில் வைக்க தமிழகஅரசு தடை விதித்துள்ளது, அவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பொம்மை விற்பனையை வாழ்வாதாரமாக நம்பி வாழுந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகஅரசின் தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தி,  தமிழ்நாடு கைவினை காகிதகூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பு சங்கத்தினர், சட்டமன்ற பேரவை நடைபெற்றுவரும்  சென்னை கலைவாணர் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தாங்கள் கடன்வாங்கி தொழில் செய்து வருவதாகவும், தமிழகஅரசின் தடையால், தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறியதுடன், நாங்கள்  வங்கியில் பெற்ற  கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.