டில்லி
மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை அரசு கைப்பற்ற உள்ளதாக வந்த செய்தி காந்தியவாதிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த 1917 ஆம் வருடம் குஜராத் மாநிலம் சபர்மதியில் அமைக்கப்பட்ட சபர்மதி ஆசிரமத்தைக் காந்தி ஆசிரமம் மற்றும் அரிஜன் ஆசிரமம் எனவும் அழைப்பது வழக்கம், இந்த ஆசிரமம் ஒரு மயானம் மற்றும் சிறைச்சாலைக்கு இடையில் இருந்த ஒரு தரிசு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரமத்தில் சுமார் 200 பேர் வசித்து வருகின்றனர். இந்த ஆசிரமத்தில் மகாத்மா காந்தி கடந்த 1917 முதல் 1930 வரை வசித்து வந்தார்.
இந்த ஆசிரமத்தில் ஒரு மேல் நிலைப் பள்ளி, அரிஜனப் பெண்கள் தங்கும் விடுதி, ஆரம்பப் பள்ளி ஆசிரியை பயிற்சிப் பள்ளி, உள்ளிட்டதும் அமைந்துள்ளது. அத்துடன் குஜராத் காதி கிராமோத்யோக் சார்பில் கதர் துணிகள், உள்ளிட்ட பல கைவினைப் பொருட்கள் விற்கப்படுகிறது. காதி கிராமோத்யோக் சார்பில் பல பயிற்சிகளும் தீண்டாமை ஒழிப்பு பிரசாரங்களும் இங்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த ஆசிரமத்துக்கு அரசு சார்பில் ஒரு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன. அதன்படி இந்த ஆசிரமம், அதன் கல்வி நிலையங்கள், அறக்கட்டளைகள் உள்ளிட்ட பலவற்றை அரசு கையகப்படுத்தி விட்டு அதற்குப் பதிலாக ஆசிரம நிர்வாகத்துக்கு இழப்பீடு வழங்க உள்ளதாக அந்த நோட்டிசில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல் காந்திய வாதிகளுக்கு கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. ஆசிரமத்தின் சொத்துக்களுக்காக இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்துடன் இந்த ஆசிரமத்தில் 1917 முதல் 1930 வரை மட்டுமல்ல இன்றும் காந்தி பல சேவைகளின் உருவில் வாழ்ந்து வருவதாக ஒரு காந்திய வாதி தெரிவித்துள்ளார். காந்தியில் கொள்ளுப் பேரனான துஷார் காந்தி இதற்கு தனது டிவிட்டரில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பெயர் தெரிவிக்க விரும்பாத ஒரு ஊடகப் பிரபலம், “குஜராத் முதல்வராக மோடி பதவி வகித்த போது மகாத்மா மந்திர் என்னும் ஒரு வர்த்தக மையத்தை ரூ200 கோடி செலவில் அமைத்தார். அதில் கலைப் பொருட்கள் விற்பனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அப்போது அவர் அறிவித்தார். ஆனால் தற்போது அது ஒரு பெரிய ஓட்டல் நிறுவனத்தினரால் நிர்வகிக்கப்பட்டு ஒரு சொகுசு ஓட்டல் உள்ளது.
மகாத்மா மந்திரை சரியாக நடத்த முடியாமல் குத்தகைக்கு அளித்த அரசு தற்போது காந்தியின் ஆசிரமத்தை கையகப்படுத்த முயல்கிறது. அதே நேரத்தில் பிரபல ஓட்டல் குழுமமான லீலா குழுமத்துடன் அரசு 20 வருட ஒப்பந்தம் இட்டுள்ளதாகவும் அதற்கான நிலத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. எனவே அரசின் இந்த நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]