புதுடெல்லி: உடல்நலக் குறைவால் மரணமடைந்த தன் வீட்டுப் பணிப்பெண்ணின் உடலை முறையாக அடக்கம் செய்து, அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய கிழக்கு டெல்லி மக்களவை உறுப்பினருமான கெளதம் கம்பீர்.

ஒடிசா மாநிலத்தைச் ச‍ேர்ந்த சரஸ்வதி என்ற பெண், கம்பீரின் வீட்டில் கடந்த 7 ஆண்டுகளாக வேலைப்பார்த்து வந்தார். அவர் கணவனால் கைவிடப்பட்டவர். நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் அவதிப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி, தனது 49வது வயதில் காலமானார்.

ஆனால், தற்போதைய ஊரடங்கால், அவரின் உடலை, ஒடிசாவிற்கு அனுப்பி, அவரின் குடும்பத்தவரிடம் ஒப்படைக்க முடியாது என்பதால், டெல்லியிலேயே அனைத்தையும் முடித்து விடுமாறு, அப்பெண் குடும்பத்தார் கம்பீரிடம் கேட்டுக்கொண்டனர்.

அவர்களால் டெல்லி வரமுடியாத நிலை.
எனவே, உடலை அடக்கம் செய்து, இறுதிச் சடங்குகளையும் கம்பீரே செய்து முடித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, “என் குழந்தைகளை கவனித்துக் கொண்ட அவர், என் குடும்பத்தில் ஒருவர்.

சாதி, மதம் மற்றும் சமூக அந்தஸ்து பார்க்காமல், அனைவருக்கும் மரியாதை தர வேண்டுமென்ற கொள்கையுடையவன் நான். அதுதான் எனது இந்திய சிந்தனை” என்றுள்ளார் அவர்.

பாரதீய ஜனதாவில் இருந்தாலும், சற்று மாறுபட்ட கருத்துகளை அவ்வப்போது தெரிவிப்பவர் கம்பீர் என்பது குறிப்பிடத்தக்கது.