சென்னை: ககன்யான் விண்கலத்தில் சோதனை ஓட்டத்தின்போது, அதிலிருந்து கேப்சூல் பாராசூட் மூலம் வங்கக்கடலில் இறக்கப்பட்ட நிலையில், அதை இந்திய கடற்படையினர் மீட்டனர். இதை ஆய்வு செய்த இஸ்ரோ, அதில் உள்ள டேட்டாக்கள் சரியாக இருப்பதாக தெரிவித்து உள்ளது.
விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்காக இணையாக பல்வேறு சாதனைகளை படைத்துள்ள இந்தியா மனிதர்களை ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் ஆர்வம் காட்சி வருகிறது.. எனவே மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் கனவு திட்டமாக வைத்திருந்தனர். இந்த திட்டத்தை செயல்படுத்த பல முறை முயற்சித்த நிலையில், கொரோனா காரணமாக இந்த திட்டம் தாமதமானது. தற்போது ககன்யான் என்ற விண்கலம் உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டம் 2025ல் நிறைவு பெறும் வகையில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். அதற்கு முன்னதாக, 3 கட்டங்களாக ககன்யான் விண்கலம் போன்று மாதிரி விண்கலத்தை வைத்து சோதனை நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டனர்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஏதாவது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால் விண்வெளி வீரர்கள் தப்பிப்பதற்காக “க்ரூ எஸ்கேப் சிஸ்டம்” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பில் உள்ள பாராசூட்டுகள் மூலம் பூமியிலோ அல்லது கடலிலோ விண்வெளி வீரர்கள் தரை இறங்கி தப்ப முடியும்.
அதன்படி ககன்யான் திட்டத்தின் முதல் கட்ட சோதனை வெற்றிகரமாக நடந்தது. திட்டமிட்டபடி, குறிப்பிட்ட நேரத்தில் விண்கலம் செலுத்தப்பட்ட நிலையில், அதில் பொருத்தப்பட்டிருந்த கேப்சூல் சரியாக பிரிக்கப்பட்டு, பாராசூட்டுகளுடன் வங்கக்கடலில் இறங்கியது. இந்த கேப்சூலை கண்காணித்து வந்த இந்திய கடற்படையினர், உடனடியாக மீட்டு, சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வந்து இஸ்ரோ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
சுமார் 4 டன் எடை கொண்ட விண்கலத்தை கண்டெய்னர் வாகனத்தில் ஏற்றி சிஐஎஸ்எப் பாதுகாப்பு மூலம் துறைமுகத்தில் இருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்துக்கு எடுத்துச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்தப்பட உள்ளது.