சென்ன: தமிழ்நாடு முழுவதும்  உள்ள  37,576 அரசு பள்ளிகளில் வரும் 10ந்தேதிக்குள் ஆண்டு விழா நடத்த உத்தரவிட்டுள்ள தமிழ்நாடு அரசு, அந்த  ஆண்டு விழா செலவினங்களுக்கு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்,  மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த அரங்கம் அமைத்து, சிறந்த ஒளி, ஒலி அமைப்பினை ஏற்படுத்தி ஆண்டு விழா கொண்டாட பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் 37,576 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்டு விழாவிற்கான செலவினங்கள் கணக்கிடப்பட்டு ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2ஆயிரம் மாணவர்களுக்கு மேல் உள்ள 50 மேல்நிலை பள்ளிகளுக்கு ஆண்டு விழா நடத்த ரூ.50 ஆயிரமும்,

1,000 முதல் 2,000 மாணவர்கள் வரை படிக்கும் 339 மேல்நிலைப் பள்ளிகள், 5 உயர்நிலைப் பள்ளிகள், 4 நடுநிலைப் பள்ளிகள், 2 தொடக்கப் பள்ளிகள் என 350 பள்ளிகளுக்கு தலா ரூ.30 ஆயிரம் வீதமும்,

501 மாணவர்கள் முதல் 1,000 மாணவர்கள் வரை படிக்கும் 1,251 மேல்நிலைப் பள்ளிகள், 79 உயர்நிலைப் பள்ளிகள், 64 நடுநிலைப் பள்ளிகள், 44 தொடக்கப்பள்ளிகள் என 1,438 பள்ளிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதமும்,

251 முதல் 500 மாணவர்கள் வரை படிக்கும் 1,112 மேல்நிலைப்பள்ளிகள், 564 உயர்நிலைப் பள்ளிகள், 493 நடுநிலைப் பள்ளிகள், 288 தொடக்கப்பள்ளிகள் என 2,457 பள்ளிகளுக்கு தலா 8 ஆயிரம் வீதமும்,

101 முதல் 250 மாணவர்கள் வரை படிக்கும் 372 மேல்நிலைப்பள்ளிகள், 1,859 உயர்நிலைப் பள்ளிகள், 3,512 நடுநிலைப் பள்ளிகள், 2,236 தொடக்கப்பள்ளிகள் என 7,979 பள்ளிகளுக்கு தலா 4 ஆயிரம் வீதம் நிதி அளிக்கப்பட்டுள்ளது.

100 மாணவர்களுக்குக் கீழ் படிக்கும் 32 மேல்நிலைப்பள்ளிகள், 587 உயர்நிலைப் பள்ளிகள், 2,903 நடுநிலைப் பள்ளிகள், 21,780 தொடக்கப்பள்ளிகள் என 25,302 பள்ளிகளுக்கு தலா ரூ.2,500 வீதம்

என மொத்தம் ரூ.14 கோடியே 93 லட்சத்து 97 ஆயிரம் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பள்ளிகள் அனைத்தும் பிப்ரவிரி 10ம் தேதிக்குள் ஆண்டு விழாவை நடத்தி முடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.