சென்னை: மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை முருகன் கோயிலில்  நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மதுரை கள்ளழகர் கோயில், மருதமலை முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைசெயலகத்தில் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  (26.12.2024) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மதுரை அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில், கோயம்புத்தூர் மருதமலை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும்,

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தையும் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்ட செயலாக்கம், 2,363 திருக்கோயில்களில் குடமுழுக்கு, திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்தல், அன்னதானத் திட்டம் விரிவாக்கம், மலைத் திருக்கோயில்கள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் மருத்துவ மையங்கள் அமைத்தல், புதிய கல்வி நிறுவனங்கள் தொடக்கம், ஒருகால பூஜை திட்டம் விரிவாக்கம், துறையின் செயல்பாடுகளை கணினிமயமாக்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக சீரிய முறையில் செயல்படுத்தி வருவதோடு, சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் தொடர்ந்து நிறைவேற்றபட்டு வருகின்றன.

திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் விரிவாக்கம்

திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமானது ஸ்ரீரங்கம், அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில், பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் ஆகிய 2 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்த அரசு பொறுப்பேற்றபின், அத்திட்டத்தினை விரிவுப்படுத்திடும் வகையில் 16.09.2021 அன்று திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சமயபுரம், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களிலும், 31.12.2022 அன்று ராமேஸ்வரம் , அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயில், திருவண்ணாமலை, அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் மற்றும் மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்களிலும், 22.01.2024 அன்று திருவள்ளூர் மாவட்டம்,

பெரியபாளையம் அருள்மிகு பவானியம்மன் திருக்கோயில், விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர், அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் ஆகிய 3 திருக்கோயில்கள், என கூடுதலாக 9 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 11 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 760 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 110 கோடி ரூபாய் செலவிடப்படுவதோடு, ஆண்டுதோறும் சுமார் 3 கோடியே 36 லட்சம் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

திருக்கோயில்களில் தயாரிக்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழை (BHOG) 523 திருக்கோயில்கள் பெற்று, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்பது சிறப்புகுரியதாகும். நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்தும் விதமாக, முதலமைச்சர் இன்றையதினம் மதுரை மாவட்டம், அழகர்கோவில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் ஆகிய இரண்டு திருக்கோயில்களில் இத்திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டம் பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 2 பள்ளிகள் மற்றும் 4 கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரில் பெரும்பான்மையோர் பழனியை சுற்றி அமைந்திருக்கும் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் என்பதால் அவர்கள் வயிற்றுப் பசியுடன் கல்வி கற்க கூடாது என்ற உயரிய நோக்கத்துடன் முதலமைச்சர் 16.11.2022 அன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையில், “பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் காலை சிற்றுண்டி திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு இந்தாண்டு முதல் மதிய உணவும் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பாக நடத்தப்படும் ஒரு பள்ளி மற்றும் நான்கு கல்லூரிகளில் மதிய உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.

இதன்மூலம் 5,775 மாணவ, மாணவியர் பயன்பெறுவர். கல்லூரிகளில் காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கும் திட்டம் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில் கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் தான் முதன்முதலில் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முருகானந்தம், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் சி.ஹரிப்ரியா, இணை ஆணையர்கள் ச. லட்சுமணன், பொ. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக, மதுரை மாவட்டம், அழகர் கோவிலிருந்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் எம்.எஸ். சங்கீதா, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும்.

கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலையிலிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும், திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து சார் ஆட்சியர் . எஸ். கிஷன் குமார், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.