டெல்லி: கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, இந்தியாவில் சென்னை உள்பட 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால்வ நோயாளிகளின் எண்ணிக்கை ஒருபுறமும், உயிரிழப்பு மறுபுறமும் அதிகரித்து வருகின்றன. தினசரி பாதிப்பு மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வருகிறது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
மகாராஷ்டிரா, உ.பி., கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் தமிழகத்தில் தலா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 8 மாநிலங்கள் மட்டும் தேசிய அளவில், சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 69 சதவீதத்தை கொண்டு உள்ளது.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பல மாநிலங்களில் பகுதி நேரம், முழு நேரம், இரவு ஊரடங்கு என பல வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டு, மக்கள் கூடுவதை தவிர்த்து வருகின்றனர். இருந்தாலும் தொற்று பரவல் கட்டுக்கடங்காமல் உள்ளது. இதை கட்டுப்படுத்த மேலும் கட்டுப்பபாடுகளை மத்தியஅரசு தீவிரமாக அமல்படுத்த முனைந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்தது. அதில் நாடு முழுவதும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள், அங்குள்ள மாவட்டங்கள் குறித்து விரிவாக விதிக்கப்பட்டது. அதன்படி, 15 சதவிகிதத்திற்கு மேல் பாதிப்பு உள்ள மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் சுமார் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளதாகவும், அதில் சென்னை உள்பட தமிழகத்தில் சில மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும். சென்னை செங்கல்பட்டு திருநெல்வேலி கோயம்புத்தூர் திருப்பூர் திருச்சிராப்பள்ளி ஆகிய 6 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய சுகாதாரத்துறை திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பான இறுதி முடிவை, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னர், மத்திய அரசு அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் மே 2ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து புதிய அரசு பதவி ஏற்கும். இதன் காரணமாக ஊரடங்கை அமல்படுத்துவதில் சிக்கல் நீடித்து வருகிறது.