தூத்துக்குடி

நேற்று முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது.

இரண்டாம் அலை பரவலால் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தது.  இதைத்  தொடர்ந்து மருத்துவ ஆக்சிஜன் தேவையும் அதிகரித்தது. எனவே உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவில் உற்பத்தி தொடங்கப்பட்டது. இங்கு நேற்று வரை 493.07 டன் திரவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இந்த உற்பத்தியில் 476.26 டன் திரவ ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

முதலில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் திரவ ஆக்சிஜன் உற்பத்திக்கான கட்டமைப்பு வசதி மட்டுமே இருந்தது.  ஆகவே இது வரை திரவ ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகிறது.

ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் வாயு நிலையிலான ஆக்சிஜன் அதிகமாக உற்பத்தியாகிறது.   அதனை சிலிண்டர்களில் அடைத்து வினியோகம் செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டன.  நேற்று முதல் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வாயு நிலையிலான மருத்துவ பயன்பாட்டு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வினியோகம் தொடங்கியது.

இங்கு நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் உற்பத்தியான 260 டன் வாயு நிலையிலான ஆக்சிஜனில் 380 கிலோ எடையுள்ள வாயு நிலையிலான ஆக்சிஜன் மட்டும் 38 சிலிண்டர்களில் நிரப்பப்பட்டு தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆக்சிஜன் வினியோகிக்கும் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இனி இங்கு வரும் காலி சிலிண்டர்களுக்கு ஏற்ப வாயு நிலையிலான ஆக்சிஜன் நிரப்பப்பட்டு தேவையான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.