நாளை முதல் சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை

Must read

சென்னை

நாளை முதல் சென்னை மாநகரில் ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து இன்று சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.  சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மாநகராட்சி, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறை அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

இந்த கூட்டத்துக்குப் பிறகு ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் ஐஏஎஸ் அதிகாரிகள், காவல் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் தலைமையில் மண்டல அமலாக்கக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த குழு ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறது.   நாளை முதல் இந்த நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட உள்ளன.  இதற்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் நகரில் மிகப் பெரிய அளவில் தடுப்பூசி முகாம் நடத்தவும் பொதுமக்களுக்கு இலவச முகக் கவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

 

More articles

Latest article