சென்னை
தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவலில் தமிழகம் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. மற்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் வேளையில் தமிழகத்தில் பாதிப்பு சிறிதும் குறையாமல் உள்ளது. இங்கு தினசரி பாதிப்பு சுமார் 35 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.
இதையொட்டி மே மாதம் 10 ஆம் தேதி முதல் தமிழக அரசு ஊரடங்கு அறிவித்தது. இந்த ஊரடங்கின் போது மக்கள் பலரும் விதிகளை சரிவரக் கடைப்பிடிக்காமல் இருந்ததால் கொரோனா தொற்று கட்டுக்குள் வராத நிலை ஏற்பட்டது. இதையொட்டி இன்று முதல் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமலாக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கில் மக்கள் வெளியே வரக் கூடாது என்பதற்காக காய் கறிக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மக்கள் தேவைக்காக வண்டிகள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் நாளை முதல் காலை 8 மணி முதல் 12 மணி வரை ரேஷன் கடைகள் இயங்கும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.