சென்னை

நாளை முதல் 27 தமிழக மாவட்டங்களில் 50% பயணிகளுடன் பேருந்து சேவை தொடங்க உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கால் பெரும்பாலான பகுதிகளில் பாதிப்பு குறைந்து வருகிறது.  இதையொட்டி கொரோனா பாதிப்பு அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாகப் பிரிக்கப்பட்டுத் தளர்வுகள் நாளை காலை 6 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்தன.  தற்போது மேலும் பாதிப்பு குறைந்துள்ளது.

இதையொட்டி வரும் ஜூலை மாதம் 5 வரை அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் பாதிப்பு அதிகம் உள்ள 3 வகை பிரீவில் உள்ள 11 மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   இங்குப் பேருந்து சேவைகள் நாளை முதல் 50% பயணிகளுடன் தொடங்கப்படுகிறது.

இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன், “சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 50 சதவீத பயணியருடன் அரசுபஸ்கள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல், அரியலூர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை. தூத்துக்குடி, திருச்சி, விழுப்புரம், வேலூர், விருதுநகர் மாவட்டங்கள் உள்ளேயும், மாவட்டங்கள் இடையிலும், 50 சதவீத பயணியருடன் பேருந்துகளை இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.

ஆகவே, நாளை காலை 6:00 மணி முதல், 27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 19 ஆயிரத்து 290 பேருந்துகளில், மாநகர பேருந்துகள் 2,200; விரைவு பேருந்துகள் 365 இயக்கப்பட உள்ளன.விழுப்புரம் 2,210; சேலம் 513; கும்பகோணம் 1,592; மதுரை 1,300; திருநெல்வேலி 1,153 பேருந்துகள் என, மொத்தம் 9,333 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணியர் வருகைக்கு ஏற்ப, கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.” எனஅறிவித்துள்ளார்.