சென்னை

நாளை முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்குகிரது.

தமிழகத்தில் உயர்கல்வித்துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இங்கு பி.எஸ்.சி. பி.காம். பி.ஏ என பல்வேறு பாடப்பிரிவுகளில் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. கடந்த மாதம் 6 ஆம் தேதி இதற்கான, 2024-25 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெற்றது.

விண்ணப்பித்த 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேரில், 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்தினார்கள். கடந்த மாதம் 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற போது, ஏராளமான மாணவ, மாணவிகள் இடங்களை பெற்றார்கள்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2024-25-ம் கல்வியாண்டுக்கான பொதுத் பிரிவு கலந்தாய்வு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகி முதற் கட்ட கலந்தாய்வு வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவாரகள்.

பிறகு 2-ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு வருகிற 24-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலந்தாய்வில் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை ஆணை பெற்ற மாணவர்களுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் (ஜூலை) 3-ந்தேதி தொடங்க உள்ளன.