சென்னை
நாளை முதல் சென்னையில் மின்சார ரயில் சேவை 500 ஆக அதிகரிக்கப்படும் எனவும் நேரக் கட்டுப்பாட்டில் மாற்றமின்றி தொடரும் எனவும் தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கால் மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. அதன் பிறகு தளர்வுகளின் அடிப்படையில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் பயணம் செய்யப் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு செங்கல்பட்டு, வேளச்சேரி, அரக்கோணம் ஆகிய இடங்களுக்கு செண்டிரல் மற்றும் கடற்கரையில் இருந்து ரயில் சேவைகள் நடக்கின்றன.
இந்த ரயிலில் பயணம் செய்ய டிக்கட் வாங்கத் தனியார் மற்றும் பொதுத்துறை, அரசு ஊழியர்கள் தங்கள் அங்கீகார கடிதம் அல்லது அடையாள அட்டையைக் காட்ட வேண்டும். கடந்த 23 ஆம் தேதிமு முதல் பொதுமக்கள் மின்சார ரயிலில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் காலை 7 முதல் 9.30 வரையிலும் மாலை 4.30 முதல் 7 மணி வரையிலும் பயணம் செய்ய முடியாது. பெண் பயணிகளுக்குக் கட்டுப்பாடு ஏதுமில்லை.
தென்னக ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களின் அத்தியாவசிய தேவையைக் கருத்தில்கொண்டு மின்சார ரயில்கள் அதிகரித்து இயக்கப்பட்டு வருகின்றன. மீண்டும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் இருக்கும் மொத்த மின்சார ரயில்களின் சேவையில் 80 சதவீத ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
வரும் 28-ம் தேதி முதல் தற்போதுள்ள 410 மின்சார ரயில்களின் சேவை, 500 ஆக அதிகரித்து இயக்கப்படும். ஆனால் பொதுமக்களுக்கான நேரக் கட்டுப்பாடு தொடரும். மேலும் முகக்கவசம் அணிவது உள்ளிடட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பயணிகள் அவசியம் பின்பற்ற வேண்டும். அடுத்த கட்ட தளர்வுகளை ரயில்வே வாரியத்தின் ஒப்புதலைப் பெற்ற பிறகு அறிவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]