சென்னை
இன்று முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
இரண்டாம் அலை கொரோனா பரவலால் தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்ததால் முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. இதையொட்டி பாதிப்பு வெகுவாக குறைந்தது. அதையொட்டி கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அடிப்படையில் மாவட்டங்கள் 3 வகையாகப் பிரிக்கப்பட்டுத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தற்போது கொரோனா பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. இதையொட்டி அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. ஏற்கனவே 4 மாவட்டங்களில் ஒரு விதமான தளர்வுகளும் மற்ற மாவட்டங்களிலும் குறைந்த தளர்வுகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டங்களுக்கு இடையே மற்றும் மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்கள் பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அர்ச்சனை போன்றவற்றுக்கு அனுமதி இல்லை.
சுமார் 2 மாதங்களாக உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகளில் மக்கள் அமர்ந்து சாப்பிடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இன்று அந்த தடை விலகி 50% கொள்ளளவு வரை உணவகங்களில் அமர்ந்து உணவு சாப்பிடவும் தேநீர்க்கடைகளில் தேநீர் அருந்தவும் அனுமதிக்கப்படுகிறது.
அது மட்டுமின்றி மால்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள் போன்ற இடங்களிலும் காற்றோட்ட வசதியுடன் 50% வாடிக்கையாளர்களைக் கொண்டு இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூங்காக்கள் மற்றும் கடற்கரையில் நடைப்பயிற்சிக்கு அனைத்து மாவட்டங்களிலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.