பெங்களூரு
கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு விலக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு அடைப்பு ஆகியவை கிடையாது என அரசு அறிவித்துள்ளது.
நாட்டையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் கர்நாடக மாநிலத்திலும் அதிக அளவில் உள்ளது அகில இந்திய அளவில் கர்நாடகா மாநிலம் 5 ஆம் இடத்தில் உள்ளது. தற்போது சுமார் 1.24 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 2314 பேர் உயிர் இழந்துள்ளனர். மொத்தம் சுமார் 49800 பேர் மட்டுமே குணம் அடைந்து 72000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த மாதம் கர்நாடக அரசு கொரோனாவை கட்டுப்படுத்த ஜூலை 5 முதல் இரவு 9 மணி முதல் 5 மணி வரை முழு ஊரடங்கு அறிவித்து மக்கள் நடமாட்டத்தைத் தடை செய்தது. அத்துடன் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு அடைப்பு நடைபெற்றது. இந்த கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனா பரவுதல் அதிகரித்ததால் ஊரடங்கை ரத்து செய்ய கர்நாடக அரசு தீர்மானித்தது.
தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ள ஊரடங்கு விதிகள் தளர்வு 3.0 இன் அடிப்படையில் கர்நாடக மாநில அரசு பல புது விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடகாவில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட உள்ளது. மேலும் நாளை முதல் கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு அடைப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாடு பகுதிகளில் மட்டும் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு விதிகள் அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிகள், கல்லூரிகள், கல்வி மற்றும் பயிற்சி நிலையங்கள் ஆகஸ்ட் 31 வரை மூடப்படுகின்றன. ஆனால் ஆனலைன் வகுப்புக்களுக்கு தடை இல்லை.. மெட்ரோ ரயில், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், தீம் பார்குகள், பார்கள், விழா அரங்குகள் போன்றவற்றைத் திறக்க அனுமதி இல்லை. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் சமூக இடைவெளியுடன் நடைபெற உள்ளன.