பழனி’
இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது.
உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாகும். இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், ஆடிக் கிருத்திகை போன்ற நாட்களில் மேலும் பக்தர்கள் வருவது வழக்கமாகும். .
இந்த கோவிலின் பாதுகாப்பை முன்னிட்டு அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. குறிப்பாக கோவிலில் செல்போன் மற்ரும் கேமரா மூலம் புகைப்படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. இதற்கான தடைகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும் செல்போன் மூலம் புகைப்படம் எடுப்பது தொடர்வதால் இங்கு செல்போனுக்கு தடை விதிக்க வேண்டும் என வேண்டுகோள் எழுந்தது.
இது குறித்துத் தனி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கில் செல்போனுக்குத் தடை விதிக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பழனி கோவிலில் செல்போஒன் எடுத்துச் செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எனவே இன்று முதல் செல்போன்களை பழனியில் உள்ள படிப்பாதை, ரோப் கார், மற்றும் மின் இழுவை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களில் வைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.