டெல்லி:

மோடியின் ‘மேக் இன் இந்தியா’, ‘ரேப் இன் இந்தியா’வாக மாறி வருகிறது என்று மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, ஏற்கனவே காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், தற்போது குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.

அதேவேளையில், நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொடர்பாக குற்றங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்து வருகிறது. ஏற்கனவே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2016ம் ஆண்டு நிர்பயா பாலியல் குற்றச்சாட்டு கொலை சம்பவம் முதல்  சமீபத்தில் தெலுங்கானாவில் நடைபெற்ற பெண் மருத்துவர் பாலியல் கொலை வரை, ஏராளமான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து வருகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களை தடுக்க மோடி அரசு எந்தவித துரித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், பிரதமர் மோடியும், இந்த கொடூர சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறார்.

இது எதிர்க்கட்சிகள் இடையே கடும் கோபத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ள நிலை யில், மக்களவையிலும் மோடியின் மவுனம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். பிரதமர் மோடியின் கருத்து என்ன தெரிவிக்கும்படி பல உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இந்த விவாதத்தில் பங்குகொண்டு பேசிய, மக்களவை காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி, எல்லாவற்றையும் பற்றி பேசும் பிரதமர் இந்த விஷயத்தில் (பெண்களுக்கு எதிரான குற்றங்கள்) மவுனமாக இருப்பது துரதிர்ஷ்டவசமானது என்று கடுமையாக சாடினார்.

மேலும், மோடியின் ‘மேக் இன் இந்தியா’ தற்போது கொஞ்சம் கொஞ்சமாக ‘ரேப் இன் இந்தியா’வாக மாறி வருகிறது… நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது…. என்றும் குற்றம் சாட்டினார்.