டில்லி

ஜூன் 1 முதல் ராணுவ கேண்டீன்களில் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

நாடெங்கும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.  அதன் பிறகு இருமுறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 17 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது.    கொரோனா கட்டுக்குள் வராததால் இது மேலும் நீட்டிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.   இது குறித்துக் கடந்த 11 ஆம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி 12 ஆம் தேதிக்கு இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

மோடி தனது உரையில், “இந்தியாவுக்கு கொரோனாவால் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட போதிலும் பல முக்கிய வாய்ப்புக்களை அளித்துள்ளது.  நாம் தற்போது தலா 2 லட்சம் வரை பிபிஇ கிட மற்றும் என் 95 முகக் கவசங்களைத் தயாரிக்கிறோம்  இந்த அளவு தற்சார்பு திறன்கொண்ட இந்தியா சிறந்த தயாரிப்புகளை உருவாக்கி வருகிறது.  மக்கள் நமது நாட்டில் தயாராகும் பொருட்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு நடத்தும் ராணுவ கேண்டீன்களில், மத்திய ஆயுத காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை  உள்ளிட்டோருக்குப் பொருட்கள் விற்கப்படுகின்ரன.  இதில் ஆண்டுக்கு ரூ.2,800 கோடிக்கு மேல் விற்பனை நடக்கின்றது. இங்கு வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் இந்தியாவில் தயாராகும் பொருட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். மேலும் அவர் நாட்டு மக்கள் அனைவரும் முடிந்த அளவு இந்திய பொருட்களை வாங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.