டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

Must read

தென்காசி

டிசம்பர் 20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாகத் தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 16 முதல் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் காரணமாகக் குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.   கொரோனா சிறிது சிறிதாக குறைந்ததால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.   ஆயினும் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கவில்லை.    தமிழ்நாட்டில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டும் இங்கு அனுமதிக்காத நிலை இருந்தது.

இதையொட்டி குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி கோரி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்தனர்.  இதையொட்டி தென்காசி ஆட்சியர் கோபால சுந்தரராஜ் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் டிசம்பர் 20ம் தேதி முதல் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுகிறது.  மெயின் அருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள், ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள், பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்படுவர்.

இதையொட்டி 2 மீட்டர் இடைவெளியில் சுற்றுலாப் பயணிகள் நிறுத்தப்படுவதற்குத் தேவையான குறியீடுகள் செய்யப்பட வேண்டும். காய்ச்சல் கண்டறியும் கருவி மூலம் சோதனை நடத்தப்பட வேண்டும். தனிமனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட வேண்டும். பணியாளர்களுக்கு முகக் கவசம் கையுறை வழங்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து சுற்றுலாப் பயணிகள் அருவிகளுக்கு வருகை தருவதைத் தவிர்க்க வேண்டும்.

போதுமான கிருமிநாசினி இருப்பு வைத்திருக்க வேண்டும். தொற்று தடுப்பு நடைமுறைகள், நிலையான இயக்க நடைமுறைகள் குறித்து தேவையான இடங்களில் பதாகைகள், சுவரொட்டிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொற்று சந்தேகமுள்ள சுற்றுலாப் பயணிகளைத் தற்காலிகமாகத் தனிமைப்படுத்த வசதி செய்யப்பட வேண்டும். சிசிடிவி காமிரா மூலம் பயணிகள் கண்காணிக்கப்பட வேண்டும்.

பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் அருவி அருகில் அமைந்துள்ள கடைகளில் தவறாமல் அரசால் தெரிவிக்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கோட்டாட்சியர் அருவிக்கு வருகைதரும் பொதுமக்கள் தங்கும் இடங்களான சிறிய பெரிய விடுதிகள், உணவகங்கள், அருவி பகுதியில் அமைந்துள்ள கடை உரிமையாளர்களை அழைத்து நிலையான இயக்க நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.” என கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article