இந்தியாவில் மகாராஷ்டிராவில் கொரோனா பரவல் –நிறைய உயிர்களை குடித்தது ஊர் அறிந்த செய்தி.

தொற்று குறைந்துள்ளதால், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனால் பொதுமக்கள், கொரோனா இந்தியாவை விட்டு விலகி விட்டது போல் நினைத்து விதிமுறைகளை பின் பற்றாமல் சுற்ற ஆரம்பித்துள்ளனர்.

விளைவு?

நாளுக்கு நாள் அங்கு கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது..

பேருந்துகள் மற்றும் ரயில்கள் பொதுமக்கள் பயணிக்க எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள், முகக்கவசம் அணிவதில்லை. சமூக இடைவெளியை கடைபிடிப்பதில்லை.

இதனால் மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 5,427 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

அதிர்ச்சி அடைந்த முதல்- அமைச்சர் உத்தவ் தாக்கரே, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

மும்பையில் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படலாம் என தெரிகிறது.

இதன் முன்னோட்டமாக, பிரிஹன் மும்பை மாநகராட்சி நேற்று சில நடவடிக்கைகளை மேற்கொண்டது.

“மும்பையில், உள்ள கட்டிடத்தில் வசிப்போரில், ஐந்து பேருக்கு மேல் கொரோனா, பாதிப்பு இருந்தால், அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்கப்படும்” என அறிவித்துள்ளது.

சமூக இடைவெளி பின் பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க திருமண மண்டபங்கள், விடுதிகள், மால்கள் மற்றும் ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

– பா. பாரதி