காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய்க்கு செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை, பா.ஜ.க. அரசு ரத்து செய்துவிட்டு, அதற்கு பதிலாக விமானம் ஒன்றுக்கு ரூ. 1670 கோடி என்று 2016 ல் புதிய ஒப்பந்தம் போட்டு செயல்படுத்தியது.

இந்த விவகாரம் 2019 பொது தேர்தலுக்கு முன் சர்ச்சையானதை தொடர்ந்து, அவசர அவசரமாக குறைந்த எண்ணிக்கையிலான ரபேல் விமானங்களை இந்தியா கொண்டுவர ஏற்பாடு செய்தது.

இந்நிலையில், தற்போது பிரெஞ்சு இணையதள பத்திரிகையான மீடியா பார்ட் விமான ஒப்பந்தம் தொடர்பாக இந்திய நிறுவனம் ஒன்றுக்கு அன்பளிப்பு வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரபேல் விமானத்தின் 50 மாதிரிகளை செய்வதற்காக இந்திய நிறுவனமான டெப்ஸிஸ் சொல்யுசன்ஸ் நிறுவனத்துடன் ரபேல் ரக விமானங்களை தயாரிக்கும் டைசோ நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது தெரியவந்திருக்கிறது.

டைசோ நிறுவனத்தின் இடைத்தரகராக செயல்பட்டு வரும் சுஷேன் குப்தா-வின் சொந்த நிறுவனமான டெப்ஸிஸ் சொல்யுசன்ஸ் தயாரித்த இந்த மாதிரிகள், எங்கு உள்ளது எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து எந்த விளக்கமும் தரப்படவில்லை.

சுஷேன் குப்தா, அகஸ்டா நிறுவனத்திடம் இருந்து ராணுவ தளவாடங்கள் வாங்கிய விவகாரத்தில் 2019 ம் ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் நிறுவனத்திற்கு ரபேல் மாதிரிகளை செய்ததற்காக அன்பளிப்பாக சுமார் 4.39 கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக டைசோ நிறுவன செலவின குறிப்புகளில் இருந்ததை பிரான்ஸ் நாட்டு ஊழல் ஒழிப்பு முகமை கண்டுபிடித்துள்ளதாக மீடியா பார்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த நிறுவனத்தின் மொத்த வரவு செலவு கணக்கை ஒப்பிடுகையில் அவர்கள் குறிப்பிட்டுள்ள இந்த தொகையில் பெருத்த வித்தியாசம் இருப்பதாகவும், இதில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.