சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 890 தனியர் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கவும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக  தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.  இதனால் நூற்றுக்கணக்கான நோயாளிகள் ஆம்புலன்ஸ்களிலேயே காத்திருக்கும் அவலம் உருவாகி உள்ளது.   மேலும், தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு செல்பவர்களிடம், பல மருத்துவமனைகள் மனிதாபிமானமின்றி சிகிச்சை கட்டணம் எனற பெயரில் பல லட்சத்தை பிடுங்கி வருகின்றனர்.

இதையடுத்து, தமிழக முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக கொரோனா சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டது. தமிழகம் முழுவதும் எந்தெந்த மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறித்த விவரங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் காப்பீடு திட்டத்தின் கீழ் 890 தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிப்பது பற்றி தனியார் மருத்துவமனைகளில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும்,  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், Zero Delay வார்டு அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.