சென்னை: “உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என கூறிய அமைச்சர், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே சிகிச்சை பலனின்றி உயிரிழக்கும் சோகம் நிகழ்கிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இன்று 19வது மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்று வரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது,
மாநிலம் முழுவதும் 2,580 ஊராட்சிகளில் 100% ஒரு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது; சென்னையில் 94.19% பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சென்னையில் 74.11% பேர் 2 தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்; 38,850 பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 1,71,616 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மேலும், வரும் வியாழக்கிழமை 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று கூறியவர், கொரோனா தொற்றினால் உயிரிழப்பு தமிழ்நாட்டில் குறைவாக உள்ளது. இது மன நிறைவாக இருக்கிறது. தற்பொழுதுகூட தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்களே கொரோனா பாதிப்பில் இறந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உள்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.