சென்னை: தமிழ்நாட்டில், அரசு பள்ளியில் படிக்கும் 1லட்சம் மாணாக்கர்களுக்கு விலையில்லா மழை கோட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் செயல்பட்டு அரசு பள்ளிகளில், மாணாக்கர்களுக்கு பாடப்புத்தகம் இன்றி, சீரடை, செருப்பு, புத்தகப்பை என அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மழைக்காலத்தில், மழையில் இருந்து தப்பிக்கும் வகையில், மழைகோட் வழங்கவும் தமிழகஅரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, முழுமையாக பள்ளிக் கூடங்கள் திறந்ததும் பாடப்புத்தகங்கள் வழங்கும் போதே இதையும் சேர்த்து வழங்க பள்ளிக்கல்வித்துறை அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
இதுகுறித்து தெரிவித்துள்ள கல்வித்துறை அதிகாரிகள், ஏற்கனவே மாணவ- மாணவிகளுக்கு இலவச சீருடை, இலவச பாடப்புத்தகங்கள், காலணிகள் வழங்கப்படுவது போல் வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மழைக்கோட், கணுக்கால் வரையிலான பூட்ஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக மழைப்பொழிவு அதிகம் உள்ள மாவட்டங்கள், மலைப்பிரதேச மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் 1 லட்சம் பேருக்கு மழைக்கோட், பூட்ஸ் வழங்கப்படும் வகையில் ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.