விமானத்தில் பிறந்த குழந்தை: ஆயுள் முழுவதும் இலவச பயணம்!

சென்னை,

நடு வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது பிறந்த குழந்தை ஆயுள் முழுவதும் இலவச பயணம் செய்யலாம்  என ஜெட் ஏர்வேஸ் அறிவித்துள்ளது.

சம்பவவத்தன்று  சவூதி அரேபியாவின் தம்மம் பகுதியில்  இருந்து கொச்சிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 162 பயணிகளுடன் பயணம் செய்து கொண்டி ருந்தனர். இந்த விமானம்  நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்தபோது,  பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

விமானம் அரேபிய கடலுக்கு மேலே சுமார் 35ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, விமானப் பணிப்பெண் மற்றும் விமானத்தில் பயணம் செய்த மற்றொரு செவிலியரின் துணையோடு அந்த பெண் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

இதையடுத்து விமானம் உடனடியாக மும்பை விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது. மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியதும் பெண்ணும் அவரது குழந்தையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

அங்கு குழந்தையும் தாயும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதன் காரணமாக சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக விமானம் மீண்டும் மும்பையில் இருந்து புறப்பட்டு கொச்சி வந்தடைந்தது.

விமானத்தில் குழந்தை பிறந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம், தங்கள் நிறுவன விமானத்தில் இது போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது இதுதான் முதல் தடைவை எனவும், விமானத்தில் பிறந்த குழந்தை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஆயுள் முழுவதும் இலவச பயணம் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்து உள்ளது


English Summary
Free lifetime travel on Jet Airways for baby born on its Dammam-Kochi flight