மதுரை: சென்னை மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
மதுரை ராஜாஜி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூபாய் 87.28 லட்சம் செலவில் விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகள், பன்னோக்கு மருத்துவமனையில் கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகளை (PAY WARDS) அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம் ராஜாக்கூர் துணை சுகாதார நிலையத்தில் ரூபாய் 1.33 கோடி செலவில் ராஜாக்கூர், குமாரபுரம், எஸ். கீழ்ப்பட்டி, பெரியபூலான்பட்டி, வலையங்குளம் ஆகிய இடங்களில் புதிய மருத்துவ கட்டிடங்கள் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு கட்டண வார்டுகளை அறிமுகப்படுத்தி வருகிறது. நவீன வசதிகளுடன் இங்கு நோயாளிகளுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்படி மதுரை அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 8 வார்டுகளும், அரசு புதிய மருத்துவமனை விபத்து மற்றும் தீவிர சிகிச்சை பிரிவில் 8 வார்டுகளும் உள்பட மொத்தம் 16 கட்டண மருத்துவ படுக்கை தொகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 12 ஆஸ்பத்திரிகளுக்கான புதிய கட்டிடம் இன்று மாலை திறந்து வைக்கப்படுகிறது என்றவர், சென்னை-மதுரை அரசு ஆஸ்பத்திரிகளில் கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய மந்திரியை 30 முறைக்கும் மேலாக சந்தித்து பேசியுள்ளோம் என்றார்.
தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்டது. இதன் அடிப்படையில் மதுரை, கோவை மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கட்டண வார்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,200 வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். சொகுசு அறைகளுக்கு ரூ.2,000 கட்டணம் வசூலிக்கப்படும். 3-ம் பாலின அறுவை சிகிச்சையில் மதுரை அரசு மருத்துவமனை சாதனை படைத்து வருகிறது.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு மருத்துவமனையில் கட்டண வார்டுகள் திறந்து வைக்கப்பட்டன. மதுரையில் இன்றைக்கு 16 வார்டுகளை திறந்து வைத்துள்ளேன். அரசு மருத்துவமனை கட்டண வார்டில் குளிர்சாதன வசதி, கழிவறை, ஹீட்டர், தொலைக்காட்சி, நோயாளிகள் படுக்கை, உதவியாளர் படுக்கை ஆகியவை ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
தென்னிந்தியாவில் அதிகப்படியான ஆபரேஷன்கள், மதுரை அரசு மருத்துவமனையில் நடத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் மற்றும் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இலவச கருத்தரிப்பு மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது என்றும் கூறினார்.