மும்பை
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் வரலாறு காணாத அளவுக்கு தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த பரவலில் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. நேற்று வரை மகாராஷ்டிராவில் 42.38 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 64 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். தற்போது 6.95 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது தற்போது இந்தியாவில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரு மருந்துகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக கொரோனா முன்களப் பணியாளர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இரண்டாம் கட்டமாக 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் 45 வயதைத் தாண்டி இணைநோய் உள்ளவர்களுக்கும் மார்ச் 1 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏப்ரல் 1 முதல் 45 வயதை தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. வரும் மே மாதம் 1 ஆம் தேதி முதல் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா ஊசி போட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் சுகாதார அமைச்சர் நவாப் மாலிக் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் மகாராஷ்டிர மாநிலத்தில் 18 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி 12 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கொள்முதல் செய்யச் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.