சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ்  மத்தியஅரசின் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் – தேர்வு­ மூலம் தேர்வு செய்ய தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டடுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகும் வண்ணம் பல பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதன்படி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக கட்டணமில்லா உறைவிடப் பயிற்சியினை துவங்கவுள்ளது. இப்பயிற்சிக்கான 1000 பயனாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக 14.07.2024 அன்று இருவேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தவுள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி அல்லது SSC, ரயில்வே தேர்வுக்களுக்கான பயிற்சி, இவற்றில் ஏதேனும் ஒன்றுக்கு மட்டுமே பயிற்சி மேற்கொள்ள முடியும். எனவே, இந்த நுழைவுத் தேர்வுகளுக்கு ஆர்வமுள்ள மாணவர்கள், https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 23.06.2024 ஆகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.