சென்னை:

திருவான்மியூர்  அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சமுக நலத்துறை அமைச்சர் சரோஜாவும் கலந்து கொண்டார்.

தமிழகத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்ததது . இந்த நிலையில், இன்று  சென்னை திருவான்மி யூரில் உள்ள அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார்.

 அக்‌ஷய பாத்ரா என்ற தொண்டு நிறுவனம், சென்னை மாநகராட்சியுடன்  இணைந்து அரசு பள்ளிகளில், மாணவ மாணவிகளுக்கு  காலை உணவை வழங்கும் என ஏற்கனவே  தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை உணவு திட்டம் சென்னையில் தொடங்கப்பட்டு உள்ளது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கவர்னர் பன்வாரிலால் மாணவ மாணவிகளுக்கு காலை உணவை வழங்கி அவர்களுடன் கலந்துரையாடினார். அவருடன் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா, அமைச்சர் ஜெயக்குமார், தென்சென்னை எம்.பி. ஜெ.ஜெயவர்தன்  உள்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், மதிய உணவு வழங்கும் திட்டத்தையும், அட்சய பாத்திரம் தொண்டு நிறுவனத்திடம் வழங்க அமைச்சரவை பரிசீலிக்க வேண்டும் என கவர்னர்  கேட்டுக்கொண்டார்.

இந்த காலை உணவு திட்டம் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என தெரிகிறது.