சென்னை: தமிழகத்தில் புதன்கிழமை தோறும் இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மேலும்,  இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதங்கள் ஆகி தடுப்பூசி செலுத்த தமிழகத்தில் செப்டமர் 4ம் தேதி வரை 4.34 கோடி பேர் தகுதியானவர்கள் உள்ளார்கள் என்றும் தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக தமிழகஅரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி,   மத்தியஅரசின் உத்தரவின்படி,  செப்டம்பர் 30ம் தேதிக்குள் 75 நாட்களில் 18 முதல் 59 வயதோருக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, 60 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக கொடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் பூஸ்டர் தடுப்பூசிக்கான கால அவகாசம் முடிந்தாலும் கையிருப்பில் உள்ள தடுப்பூசியை செலுத்துமாறு மத்திய அரசு அறிவுறுத்தி யிருப்பதால் தமிழ்நாட்டில் ஒவ்வொரு புதன்கிழமையும் தொடர்ந்து பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி ஆறு மாதங்கள் ஆகி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தமிழகத்தில் செப்டம்பர் 4ம் தேதி வரை 4.34 கோடி பேர் தகுதியானவர்கள் உள்ளார்கள். இவர்களில் 92,42,804 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 21.26% பேர் பூஸ்டர் தடுப்பூசி  செலுத்தியுள்ளனர். இன்னும் 3.42 கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டியுள்ளது. தற்போது 9.82 லட்சம் டோஸ் கையிருப்பு உள்ளதால், அவை அடுத்த சில வாரங்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக செலுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.