கோவை:

கோவை பகுதியை சேர்ந்த நடிகை சுருதி இளைஞர்களை ஏமாற்றி சம்பாதித்த கோடிக்கணக்கான  பணத்தை திரையுலகில் முதலீடு செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலத்தை சேர்ந்த சாப்ட்வேட் இஞ்சினியர் ஒருவர் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அப்போது,  தன்னை கோவையை சேர்ந்த இளம்பெண் சுருதி என்பவர் காதலிப்பதாக ஏமாற்றி லட்சணக்கில் பணத்தை கறந்துவிட்டார். அதை மீட்டுத்தாருங்கள்  என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார், கோவை   பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் நடிகை சுருதி என்பவரையும் அவருக்கு துணையாக இருந்த மேலும் 3 பேரையும்  கைது செய்தனர்.

விசாரணையில், இவர் ஏராளமான இளைஞர்களை தனது காதல் வளையில் வீழ்த்தி, அவர்களை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியிருப்பது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சுருதி அவரது வீட்டில் நடத்திய சோதனையின்போது, தங்க, வைர நகைகள், பணம், சொகுசு கார், ‘மேக்-அப்’ செட்டுகள், 15 அலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து கோவை போலீசார் கூறியதவாது, சுருதி வீட்டில் கைப்பற்றப்பட்ட மொபைல் மூலம் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் பட்டியல் தயாரித்து விசாரணை மேற்கொண்டதாகவும் அப்போதுதான் அவர் பலரை ஏமாற்றி பண மோசடி செய்திருப்பது தெரிய வந்தது என்றும் , அவருடன் திரையுலகை சேர்ந்த பலர் தொடர்பில் இருந்ததும் தெரிய வந்துள்ளது என்றனர்.

மேலும் அவரது வங்கிக் கணக்கு விபரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சுருதிமீது ஏற்கனவே  80 லட்சம் ரூபாய் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சுருதி பலரை ஏமாற்றி பறித்த பணத்தை எங்கு முதலீடு செய்துள்ளார் என்பது குறித்து விசாரணை செய்து வருவதாகவும், இந்த பணத்தை திரையுலகில் முதலீடு செய்திருக்க வாய்ப்பு இருப்பது குறித்தும் விசாரணை செய்து வருவதாகவும் கூறி உள்ளனர்.

அவருடன் கைது செய்யப்பட்ட மற்ற மூன்று பேரின் வங்கி கணக்கு பரிவர்த்தனை, மொபைல் போன் அழைப்பு குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.

இவ்வாறு, போலீசார் தெரிவித்தனர்.

நடிகை சுருதிமீது ஏற்கனவே கோவை மாநகர குற்றப்பிரிவு, பெங்களூரூ உள்பட, பல்வேறு இடங்களில், மோசடி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.