கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு பாரதீய ஜனதாவின் சித்து விளையாட்டுகள்தான் காரணம் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், காங்கிரஸ் கூட்டணி அரசுக்குள் நிலவிய ஏகப்பட்ட புகைச்சல்களும், முரண்பாடுகளும் அரசு கவிழ்வதற்கான முக்கிய காரணிகளாக விளங்கியுள்ளன.

கர்நாடகாவின் வடக்கிலுள்ள பெலகாவி மாவட்டத்தில் நடைபெற்ற தாலுகா அளவிலான ஊரக வங்கி தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் சிவகுமார் தலையிட்டது, தெற்கு கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதளம் கட்சிகளுக்கிடையிலான மோதல், தேவகெளடா குடும்பத்திற்கும், சித்தராமையாவிற்கும் உள்ள தீராப் பகை, நிலைமையை சரியாக கணித்து களத்தில் இறங்கிய பாரதீய ஜனதாவின் செயல்தின் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள், காங்கிரஸ் கூட்டணி அரசை பலிவாங்கிவிட்டன.

இந்தப் பிரச்சினைகளில் மிக மிக முக்கியமானது பெலகாவி மாவட்டத்தில் நிலவும் அரசியல் ரீதியான சகோதர யுத்தம். அந்த மாவட்டத்தின் சக்திவாய்ந்த ஜார்கிஹோலிஸ் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களிடையே நிலவும் பெரிய அரசியல் போட்டிதான், குமாரசாமியின் ஆட்சியைக் காவு வாங்கிய பிரதமான அம்சமாக குறிப்பிட்ப்படுகிறது. இந்த சகோதர யுத்தம் அடுத்து பாரதீய ஜனதா அரசமைந்தால், அதற்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இரண்டாவதாக கூறப்படுவது, மதசார்பற்ற ஜனதாதள கட்சியில் தலைவராக இருந்து, பின்னர் தேவகெளடா குடும்பத்துடன் பிணக்கு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சிக்கு தாவிய சித்தராமையாவுக்கு, குமாரசாமியுடன் இருந்த பகை. காங்கிரசில் ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர் சித்தராமையாவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பது கவனிக்கத்தக்கது.

எனவே, பாரதீய ஜனதாவின் சித்து விளையாட்டுக்கள் ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் கூட்டணிக்குள் நிலவிய ஏகப்பட்ட முரண்பாடுகளே அரசு கவிழ்வதற்கு முதன்மை காரணிகளாக இருந்துள்ளன.