2040-ம் ஆண்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை!! பிரான்ஸ் முடிவு

பாரீஸ்:

சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் விதமாக வரும் 2040-ம் ஆண்டு முதல் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க பிரான்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெட்ரோல், டீசல் உள்ளிட்ட சுற்றுச்சூழல்களை மாசுபடுத்தும் வாகனங்களை படிப்படியாக குறைத்து மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையை பிரான்ஸ் மேற்கொள்ள உள்ளது. தற்போதைய நிலவரப்படி மொத்த வாகனப் பயன்பாட்டில் வெறும் 1.2 சதவிகிதம் அளவுக்கே அந்நாட்டில் மின்சார வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எதிர்கால சந்ததியினரின் நலன் கொண்டு கரிம அமில வாயுக்களை வெளியிடும் வாகனங்களை 2040-ம் ஆண்டிலிருந்து தடை செய்ய முடிவெடுத்துள்ளதாக அந்நாட்டின் சூழலியல் துறை மந்திரி நிக்கோலஸ் தெரிவித்துள்ளார். “இந்த முடிவு ஒரு புரட்சியாக அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.

பாரீஸ் பருவநிலை மாறுபாடு மாநாட்டு ஒப்பந்தத்தின் படி நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை 2022-ம் ஆண்டுக்குள் மூடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2025-ம் ஆண்டுக்குள் அணுமின் சக்தி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை 50 சதவிகிதமாக குறைக்க முடிவெடுத்துள்ளதாகவும், இதனால், 2050 ஆண்டில் பிரான்ஸ் முற்றிலும் மரபு சாரா எரிசக்திக்கு மாறிவிடும் என்றும் நிக்கோலஸ் கூறியுள்ளார்.

மற்ற ஐரோப்பிய நாடுகளான நார்வே, நெதர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவையும் பெட்ரோல், டீசல் வாகனங்களை படிப்படியாக குறைத்துவிட்டு, முழுவதும் மின்சார வாகனங்களை பயன்படுத்தும் முடிவில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


English Summary
France plans to ban all petrol and diesel vehicles by 2040