சென்னை,
மாறன் சகோதரர்கள் மீதான முறைகேடு வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. தற்போது, நவ.10-க்கு ஒத்திவைத்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது திமுக சார்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தார். அப்போது, பி.எஸ்.என்.எல் இணைப்பை முறைகேடாக தனது அண்ணனின் சன்டிவி நிறுவனத்துக்கு பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்கு 1.78 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும் சி.பி.ஐ வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கு, சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கின் ஒவ்வொரு விசாரணையின்போதும் ஒருசிலர் ஆஜராகாமல் தவிர்த்தும், புதிய மனுக்கள் தாக்கல் செய்தும் வழக்கை இழுத்தடித்து வருகின்றனர்.
இந்த பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 9ந்தேதேதி சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதைத்தொடர்ந்து குற்றப்பத்திரிகையின் நகல் 6 மாதம் கழித்து ஜூன் 6ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது சுமார் 2500 பக்கம் உள்ள குற்றப்பத்திரிகையின் நகல் மாறன் சகோதரர்கள் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் 7 பேரிடமும் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள்மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறம் என்று எதிர்பார்த்த நிலையில், விசாரணை இழுத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கிறது.
ஏற்கனவே குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 3ந்தேதி நடைபெற்ற விசாரணயின்போது வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என்று மாறன் சகோதரர்கள் தரப்பில் இருந்து புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் அளிக்கும்படி சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணை 23ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பில் மேலும் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நவம்பர் 10 ம் தேதி வரை கால அவகாசம் அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.
இன்றைய விசாரணையின்போது மாறன் சகோதரர்கள் யாரும் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.