அகமதாபாத்: இலங்கையில் இருந்து சென்னை வழியாக ஊடுருவி குஜராத் சென்ற  4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் குஜராத்தின் அகமபாத் விமான நிலையத் தில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்கள் பாஜக முக்கிய தலைவர்களை கொல்ல திட்டமிட்டது தெரிய வந்துள்ளது.  இது பரபரபபை ஏற்படுத்தி உள்ளது. இந்த 4 பயங்கரவாதிகளும்,   தமிழ்நாட்டிற்குள்  எப்படி வந்தார்கள் என கேள்வி எழுந்துள்ளது.

சமீப காலமாக தமிழ்நாட்டில் போதைபொருட்கள் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில், பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும் அதிகரித்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுவும் திமுக அரசு பதவி ஏற்றபிறகு, கோவையில் நடைபெற்ற கார் குண்டுவெடிப்பு மற்றும், பெங்களூருவில் நடைபெற்ற ஹோட்டல் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் சென்னையில் தங்கியிருந்ததும் தமிழக அரசு மீது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைளைத் தொடர்ந்து தேசிய புலனாய்வுதுறை, அமலாக்கத்துறை என மத்திய புலனாய்வு அதிகாரிகள் தமிழ்நாட்டை, குறிப்பாக சென்னை, கோவை போன்ற இடங்களை அடிக்கடி சோதனையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 18வது மக்களவைக்கான தேர்தல் நடைபெற்று வருவதால், பயங்கரவாதிகள் தேர்தலை குலைக்க சதி திட்டம் தீட்டி உள்ளதாக மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்து, மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தி இருந்தது.  இந்த நிலையில் குஜராத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் மிகப்பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசாருக்கு கடந்த 18-ந் தேதி அன்று தகவல் கிடைத்தது.

இந்த பயங்கரவாத செயலை செய்யும் பயங்கரவாதிகள், பேருந்து, ரெயில் அல்லது விமானம்  மற்றும் வாகனங்கள் மூலமாக குஜராத்துக்கு வரலாம் என எதிர்பார்க்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.  மத்திய மாநில அரசுகள் இணைந்து,  பயங்கரவாதிகளை கூண்டோடு பிடிக்க திட்டம் தீட்டி கண்காணிப்பை பலப்படுத்தினர்.

இதுதொடர்பாக போலீசார் மேற்கொண்ட ரகசிய விசாரணையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் சிலர், இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராதுக்கு வர இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை தீவிரமாக கண்காணித்த மத்தியஅரசு,  ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர்  சென்னையில் இரந்து விமானத்தில் குஜராத்துக்கு வர இருப்பதை உறுதி செய்தது. பயங்கரவாதிகள் 4 பேர் இலங்கையில் இருந்து  தமிழ்நாடு வழியாக குஜராத் செல்வதற்கு, விமான டிக்கெட் எடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதைத்தொடர்ந்து, அகமதாபாத்  உள்பட பல விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்தி னர்.  அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார், அதிரடிப்படையினர், ரகசிய பாதுகாப்பு மற்றும் உளவுத்துறையினர்  குவிக்கப்பட்டு உஷார்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையில்,  எதிர்பார்த்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்நத் 4 பயங்கரவாதிகள் அகமதாபாத் விமான நிலையம் வந்திறங்கினர். அவர்களை சுற்றி வளைத்து மடக்கி  கொத்தாக தூக்கிய அதிரடிப்படையினர், அவர்களை ரகசிய இடத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களது பெயர்,  முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் என்பதும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், இவர்கள் 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களுக்கு தமிழ் மட்டுமே தெரிந்துள்ளதாகவும், வேறு மொழிகள் எதுவும் தெரியவில்லை என்று கூறப்படுகிறத. . இதையடுத்து தமிழ் தெரிந்த போலீசாரை வைத்து 4 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

 விசாரணையில், 4பயங்கரவாதிகளும்,  ஐ.எஸ்.பயங்கரவாத அமைப்பின் தலைவர்களில் ஒருவராக திகழும் அபுபக்கர் அல் பாக்தாதி என்பவரோடு   தொடர்பில் இருந்ததும், அவரது உத்தரவின் பேரில், இந்தியாவின்  குஜராத் மாநிலத்தில் தாக்குதல் நடத்துவதற்கு  திட்டம் தீட்டியதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்தே 4 பேரும் குஜராத் வந்ததாகவும்,  அபுபக்கர் அல் பாக்தாதி   கட்டளைக்காக காத்திருந்ததும், அவர் கட்டளையிட்டதும் தங்களது திட்டத்தை நிறைவேற்ற இருந்ததாகவும் வாக்கு மூலமாக அளித்துள்ளனர்.

மேலும், விசாரணையில், இவர்கள்  குஜராத்தில் பா.ஜனதா மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை கொல்ல  வந்ததும், குறிப்பிட்ட சில தலைவர்களின் பெயரை குறிப்பிட்டு, அவர்கள் மீது எப்போது எங்கு வைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை நீ பிறகு சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள் என்று  அவர்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

 4 பயங்கரவாதிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து,  அகமதாபாத்தில் நானா சிலோடா நகரில் ரகசிய இடத்தில்  போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு ஏராளமான ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட  3 துப்பாக்கிகள், 20 தோட்டாக்கள் உள்பட சில தகவல் கருவிகளும் இருந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த   குஜராத் டி.ஜி.பி. விகாஸ் சகாய், பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு இருப்பதையும், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதையும்  உறுதிப்படுத்தியதுடன்,   இதன் மூலம் இந்த தாக்குதல் சதி திட்டத்தின் பின்னணியில் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு பற்றியும் விசாரணை மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும்,  ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தலைவரான அபுபக்கரோடு இ-மெயில் மூலமாக 4 பேரும் உரையாடிய தகவல்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் தாக்குதலுக்கான நேரம் பற்றி பின்னர் தெரிவிக்கப்படும் என்பது பற்றிய தகவல்களும் இடம் பெற்றுள்ளன.

குஜராத்தில் பா.ஜனதா தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களிலோ அல்லது அவர்கள் காரில் செல்லும்போதோ 4 பேரும் மனித வெடிகுண்டுகளாக மாறி நாட்டையே அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றவும் சதித் திட்டம் தீட்டி செயல்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முகமது நஸ்ரத், முகமது நப்ரான், முகமது ரஸ்தீன், முகமது பரீஸ் ஆகிய 4 பேரும் இலங்கையில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்பு ஒன்றில் இணைந்தே முதலில் செயல்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரும் கடந்த பிப்ரவரி மாதம் ஐ.எஸ். பயங்கரவாத தலைவரான அபுபக்கரை சந்தித்து ஐ.எஸ்.அமைப்பில் உறுப்பினராக சேர்ந்து உள்ளனர்.

குஜராத்தில் நாச வேலையில் ஈடுபடுவதற்காக அபுபக்கர் ரூ.4 லட்சம் பணத்தையும் அனுப்பி வைத்துள்ளார். இது முன் பணமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கைதான 4 பேரில் முகமது நஸ்ரத்திடம் பாகிஸ்தான் விசா இருந்துள்ளது. அதையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர். இந்த விசாவை வைத்து நஸ்ரத் பாகிஸ்தான் சென்று வர திட்டமிட்டதும் தெரிய வந்துள்ளது.

4 பயங்கரவாதிகள் மீதும் கூட்டு சதி, நாட்டுக்கு எதிராக போர் தொடுத்தல், ஆயுத தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பாராளுமன்றத் தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதற்குள் 4 பேர் நாச வேலைக்கு திட்டம் தீட்டியதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து கடைசி கட்டத் தேர்தல் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

Photo – Video: Thanks ANI