சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 5 மருத்துவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் 2 பேர் குணமடைந்து விடு திரும்பியுள்ளனர். 3 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் ராயபுரம், திருவிக நகர், அண்ணாநகர், கோடம்பாக்கம், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை பகுதிகளில் அதிக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 199 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதன்படி, உறுதி செய்யப்பட்ட நபர்கள் சென்னையில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற மண்டலம் வாரியான விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 63 பேரும், திருவிக நகரில் 26 பேரும், அண்ணாநகரில் 22 பேரும், கோடம்பாக்கத்தில் 22 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 17 பேரும், தேனாம்பேட்டையில் 14 பேரும் உள்ளனர். மேலும், பெருங்குடி மற்றும் அடையாறில் 6 பேரும், வளசரவாக்கம் மற்றும் திருவொற்றியூரில் தலா 4 பேரும், மாதவரத்தில் 3 பேரும், சோழிங்கநல்லூர், ஆலந்தூர் பகுதிகளில் தலா 2 பேரும் உள்ளனர்.
சென்னையில் மணலி மற்றும் அம்பத்தூரில் இது வரை கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாரும் இல்லை என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 13 மண்டலங்களில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருக்கின்றனர்.
எனவே, இப்பகுதிகள் அனைத்தும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு வீடு வீடாக சோதனை செய்யப்படும் வரும் பணிகள் 93% முடிவுற்று உள்ளன என்றும், இப்பகுதிகளில் உள்ள மக்கள் அதிக கவனத்துடன் இருக்குமாறும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில், சென்னை கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் பணிப்புரிந்து வந்த 45 வயது ஆண் மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாறும் 27 வயது பெண் டாக்டர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அந்த தனியார் மருத்துவமனை மூடப்பட்டது.
இந்த 2 டாக்டர்களிடமும் சிகிச்சைப் பெற்ற நோயாளிகளை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.
டாக்டர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று எப்படி ஏற்பட்டத்து என்பது தெரியவில்லை என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.