மும்பை
மும்பை டாக்டர் தீபக் அமராபுர்கர் மரணத்தை ஒட்டி, கழிவு நீர் மேன் ஹோலை திறந்து வைத்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் கடந்த மாதம் 315 மிமீ மழை பெய்து ஊரே வெள்ளக்காடாக இருந்தது. அந்த சமையத்தில் டாக்டர் தீபக் அமராபுர்கர் தனது காரில் வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்தார். வெள்ள நீர் புகுந்ததால் அவர் வாகனம் நின்று விட்டது. ஓட்டுனரிடம் பிறகு வாகனத்தை எடுத்து வருமாறு சொல்லி விட்டு நடந்து வீட்டுக்குச் சென்றுள்ளார். மாலை 7 மணிக்கு ஹனது மனைவியிடம் தொலைபேசியில் தான் வீட்டுக்கு மிக அருகாமையில் இருப்பதாகவும், நடந்து வந்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் வீடு வந்து சேரவில்லை.
ஒன்றரை நாட்கள் கழித்து அவர் உடல் கழிவுநீர் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப் பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் கழிவு நீரில் முழுகி இறந்திருக்கலாம் என கண்டறியப்பட்டது. மும்பை நகராட்சி ஊழியர்கள் யாரும் எந்த கழிவுநீர் மேன்ஹோலையும் திறக்கவில்லை என விசாரணையில் தெரிந்தது. அந்தப் பகுதிகளில் உள்ள அனைத்து சிசிடிவி காமிரா பதிவுகளும் சோதிக்கப்பட்டதில் நால்வர் அங்குள்ள கழிவுநீர் மேன்ஹோலை திறந்து வைத்தது கண்டுபிடிக்கப் பட்டது. அவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் சித்தேஷ் பல்சேகர், தினார் பவார், ராகேஷ் காதம் மற்றும் நிலேஷ் காதம் ஆகியோர் ஆவார்கள். அவர்கள் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகாமல் இருக்க அவர்கள் கழிவு நீர் மேன் ஹோலை திறந்து வைத்துள்ளனர் என தெரிய வந்துள்ளது. தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்ட அவர்கள் நால்வரும் ஜாமீனில் விடப்பட்டுள்ளனர்.
இது போல வெள்ளம் வராமல் இருக்க மேன்ஹோலை திறக்கக் கூடாது எனவும், பாதையில் நடக்கும் மக்கள் மேன் ஹோலை கவனித்து செல்லவேண்டும் எனவும் ஏற்கனவே போலீசார் அறிவித்துள்ளனர். வெள்ளம் முழுவதும் ஓடினாலும் மேன்ஹோல் மீது ஒரு தண்ணீர் சுழற்சி இருப்பது கண்ணுக்கு புலனாவதால் அதை கவனித்து செல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.