சென்னை:  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , சைதாப்பேட்டையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் கட்டப்படும் மாணவர் விடுதிக்க  அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, 90 வீரர் – வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று , சென்னை எம்.சி.ராஜா கல்லூரி மாணவர் விடுதி வளாகத்தில் தற்போது காலியாகவுள்ள இடத்தில் 10 தளங்களுடன் 44 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவர் விடுதிக் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அதைத்தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர்  ஸ்டாலின் தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 90 வீரர் – வீராங்கனைகளுக்கு ரூ.5.97 கோடிக்கான உயரிய ஊக்கத் தொகையை வழங்கினார்.

பின்னர், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்கும் உயர்கல்வி பயிலும் 100 மாணவர்களுக்கு DBS வங்கியின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து தலா ரூ. 25 ஆயிரம் வீதம், மொத்தம் ரூ. 25 இலட்சம் வழங்கிடும் அடையாளமாக 5 மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.